இந்தியா

`பெண் ஊழியர்களுக்கென எந்த மெனோபாஸ் பாலிசியும் அரசிடம் கிடையாது’-காரணம் சொன்ன அமைச்சர்

`பெண் ஊழியர்களுக்கென எந்த மெனோபாஸ் பாலிசியும் அரசிடம் கிடையாது’-காரணம் சொன்ன அமைச்சர்

நிவேதா ஜெகராஜா

மக்களவையில் இன்று, விழுப்புரம் தொகுதி எம்.பி. ரவிக்குமார், `மெனோபாஸ் காலத்தில் பெண்கள் எதிர்கொள்ளும் உடல்நல சிக்கல்கள், மாற்றங்களை கருத்தில் கொண்டு பெண் ஊழியர்களுக்கு இந்தியாவில் ஏதேனும் பாலிசி (மருத்துவ கொள்கை) மேற்கொள்ளப்பட்டு வருகிறதா’ என கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த அமைச்சர் ஸ்மிருதி இரானி, `இப்போதைக்கு மெனோபாஸ் தொடர்பான எந்த மருத்துவ கொள்கையும் பெண் ஊழியர்களுக்கு இல்லைஎன்றார்.

இன்று மக்களவையில் எம்.பி. ரவிக்குமார், பெண்கள் மற்றும் குழந்தைகள் முன்னேற்றத்துறை அமைச்சருக்கு மக்களவையில் கேள்வியொன்று எழுப்பினார். அதில் “இந்த அமைச்சரவை, அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் பெண்களுக்கு மெனோபாஸ் தொடர்பாக ஏதாவது மருத்துவ கொள்கைகளை அறிமுகப்படுத்துவது குறித்து ஆலோசித்துள்ளதா? எனில் அதன் விவரங்களை கூறுங்கள்.

இல்லையெனில், அடுத்த ஒரு வருடத்துக்குள்ளாகவாவது அப்படியான திட்டத்தை அறிமுகப்படுத்தும் நோக்கம் இந்த அமைச்சரவைக்கு இருக்கிறதா? இருந்தால், அதுபற்றி சொல்லுங்கள்.

அதுவும் இல்லையெனில், வருங்காலத்தில் எப்போது `மெனோபாஸ் கொள்கை’களை அறிமுகப்படுத்துவீர்கள்?

தற்போதைக்கு அரசு தரப்பில், அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணிபுரிவோரில், மெனோபாஸ் காலத்திலுள்ள பெண்களின் உடல் நலன் சார்ந்த பிரச்னைகள் எதிர்கொள்ளும் சிக்கல்கள் குறித்து என்ன மாதிரியான விழிப்புணர்வு முன்னெடுப்புகள் எடுக்கப்பட்டு வருகிறது?”

என அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பினார்.

இதற்கு அமைச்சர் ஸ்மிருதி இரானி பதிலறிக்கை அளித்தார். அதில், “மெனோபாஸ் என்பது, பெண்களுக்கு வயது அதிகரிக்கையில் ஏற்படும் இயல்பான உடல் சார்ந்த மாற்றம்தான். பெரும்பாலும் இது 45 - 55 வயதுக்குள் ஒரு பெண்ணுக்கு நிகழும். ஒரு வருடம் அல்லது அதற்கு மேற்பட்ட காலத்துக்கு மாதவிடாய் ஏற்படாமல் இருக்கும் பெண்கள், அவர்கள் மெனோபாஸ் காலத்தில் இருக்கின்றனர் என குறிப்பிடப்படுவர். இந்த நேரத்தில் வெகு சிலருக்கே சில லேசான பக்கவிளைவுகள் இருக்கும். சிலருக்கெல்லாம் எவ்வித பக்கவிளைவும், பாதிப்பும் இருக்காது. ஒரு சிலருக்கு தீவிர பாதிப்பு இருக்கும். பெண்களின் வாழ்வில், மெனோபாஸூக்கு பின்னான காலகட்டம் (Post Menopausal phase) என்பது அவர்களே நினைத்தாலும் தவிர்க்கவே முடியாதது. மாதவிடாய் காலத்தைவிட, அதிக நாட்களை பெண்கள் மெனோபாஸ் காலத்தில்தான் கழிக்கின்றனர்.

தற்போது அரசு மற்றும் தனியார் துறைகளில் பணிபுரியும் பெண் ஊழியர்களுக்கு மெனோபாஸ் பாலிசி இல்லை. இருப்பினும், உலகளாவிய அளவில் தேசிய சுகாதாரத் திட்டம் (NHM) சார்பில் மலிவான மற்றும் தரமான சுகாதார சேவைகள் கிடைக்க அனைத்து பாலினருக்கும் தற்போது உறுதியளிக்கப்படுகிறது. மாதவிடாய் தொடர்பான உடல்நலப் பிரச்சினைகளும் அதன் வரம்பில் அடங்கும்.

மெனோபாஸ் தொடர்பாக அனைத்து அம்சங்களையும் கவனமாக பரிசீலித்து, அது ஏற்படுத்தும் உடல் மற்றும் மன அழுத்தம் தொடர்பான உறுதியான ஆராய்ச்சி முடிவுகளை அடிப்படையாக கொண்டு, பெண் ஊழியர்கள் எதிர்கொள்ளும் சிக்கல் குறித்தும் அதற்கு அவர்களுக்கு தரப்பட வேண்டிய உதவிகள் குறித்தும் தேவையறிந்து முடிவெடுக்க வேண்டியுள்ளது. இதை கருத்தில்கொண்டு அரசு மற்றும் தனியார் துறைகளில் பணிபுரியும் பெண் ஊழியர்களுக்கு மெனோபாஸூக்கென சிறப்பு கொள்கையை உருவாக்குவது தொடர்பான முடிவிற்காக, பங்குதாரர்கள் மற்றும் நிபுணர்களுடன் கலந்தாலோசிக்கப்பட வேண்டியுள்ளது.

இவையன்றி இப்போதைக்கு மாதவிடாய் மற்றும் அதுதொடர்பான பிற விஷயங்கள் குறித்து விழிப்புணர்வு பிரச்சாரம் செய்ய, இந்திய அரசின் பல திட்டங்கள் மற்றும் விளம்பரங்கள் நாடகம் போன்றவை மேற்கொள்ளப்படுகிறது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.