இந்தியா

என்ன சொல்கிறது? மத்திய அரசின் பெட்ரோல், டீசல் அதிரடி விலைக் குறைப்பு..!

rajakannan

மத்திய அரசு அதிரடியாக பெட்ரோல், டீசல் விலைக் குறைப்பை அறிவித்துள்ளதை அடுத்து பங்குச் சந்தையில் சரிவு
ஏற்பட்டுள்ளது. நாளுக்குள் நாள், பெட்ரோல், டீசல் அதிகரித்து வந்ததால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகினர். பெட்ரோல்
விலை ரூ90ஐயும், டீசலை விலை ரூ80ஐயும் எட்டியது. இதனால், மத்திய அரசு பெட்ரோல், டீசல் விலையை குறைக்க
வேண்டும் என்று பல தரப்பினரும் கோரிக்கை விடுத்து வந்தனர். 

இந்நிலையில், பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில், அதுகுறித்து பெட்ரோலியத்துறை
அமைச்சர் தர்மேந்திர பிரதான் மற்றும் நிதி அமைச்சர் அருண் ஜெட்லியுடன் பிரதமர் நரேந்திர மோடி முக்கிய
ஆலோசனை நடத்தினார். இதில், கச்சா எண்ணெய் விலை உயர்வு, ரூபாய் மதிப்பு வீழ்ச்சி குறித்தும் ஜெட்லியுடன்
பிரதமர் ஆலோசனை செய்துள்ளார்.

இந்த ஆலோசனைக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அருண்ஜெட்லி, மத்திய அரசு தனது பெட்ரோல், டீசல்
மீதான கலால் வரியை ரூ1.50 குறைக்க முடிவு செய்துள்ளதாக தெரிவித்தார். அதேபோல், எண்ணெய் நிறுவனங்களும்
ஒரு ரூபாய் விலைக்குறைப்பு செய்யும் எனக் கூறினார். இதனால், பெட்ரோல், டீசல் விலை ரூ2.50 உடனடியாக
குறைக்கப்பட்டுள்ளது. 

அதோடு, மாநில அரசும் இரண்டு ரூபாய் 50 காசுகள் குறைக்க வேண்டும் என மத்திய அரசு சார்பில் கடிதம்
எழுதப்பட்டுள்ளதாக கூறினார். இதனால், மத்திய அரசின் கோரிக்கையை மாநில அரசுகள் ஏற்றுக் கொண்டால்
பெட்ரோல், டீசல் விலையில் ரூ5 வரை அதிரடியாக குறையவாய்ப்புள்ளது. 

பெட்ரோல், டீசல் ஆனது சுத்திகரிக்கப்பட்டு பின்னர் அதற்கு அடிப்படை ஆதார விலை ஒன்று நிர்ணயிக்கப்படும்.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலை ஏற்றத்தை பொருத்து இது முடிவு செய்யப்படும். இந்த அடிப்படை
விலையில் இருந்து பெட்ரோல், டீசல் விலை மீது மூன்று நிலைகளில் வரிகள் மற்றும் கமிஷன் சேர்க்கப்படுகிறது.

நிலை 1 : கலால் வரி ( மத்திய அரசு வரி ) கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதற்கான செலவு மற்றும் போக்குவரத்து
செலவை ஈடுகட்டுவதற்காக கலால் வரி விதிக்கப்படுகிறது. 

நிலை 2 : டீலர் கமிஷன் ( முகவர் தரகு விலை) - வாங்குவதற்கும் விற்பதற்குமான விலையில் செய்யப்படும் மாற்றம்;
ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு சுமார் ரூ3 வரையில் டீலர் கமிஷன் இருக்கும். 

நிலை 3 : வாட் வரி - மதிப்பு கூட்டு வரி - மாநில அரசின் சார்பில் விதிக்கப்படும் வரி. மாநிலத்திற்கு மாநிலம்
வித்தியாசப்படும்.

கலால் வரியைப் பொறுத்தவரையில் பெட்ரோலுக்கு ரூ19.48, டீசலுக்கு ரூ15.33 வரி விதிக்கப்படுகிறது. தன் தரப்பிலான
இந்தக் கலால் வரியில்தான் மத்திய அரசு விலை குறைப்பு செய்துள்ளது. அதேபோல், மாநில அரசு சார்பிலான வாட்
வரியைதான் குறைக்க வேண்டுமென மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது. வாட் வரியைப் பொறுத்தவரை
பெட்ரோலுக்கு 27 சதவீதமும், டீசலுக்கு 16.75 சதவீதமும் விதிக்கப்படுகிறது. டீசலுக்கு மட்டும் சுற்றுச்சூழல் செஸ்
வரியாக மாநில அரசு 25 பைசா கூட்டுகிறது.

பெட்ரோல், டீசல் விலை குறைப்பால் எண்ணெய் நிறுவனங்களின் பங்கு மதிப்பு சரிவை சந்தித்துள்ளன. ஹிந்துஸ்தான்
மற்றும் பாரத் பெட்ரோலியம் நிறுவனங்களின் பங்கு மதிப்பு 12%, இந்தியன் ஆயில் நிறுவனத்தின் பங்கு மதிப்பு 16%
சரிவடைந்துள்ளது.

சென்னையில் பெட்ரோல் ரூ87.33க்கும், டீசல் ரூ79.79க்கும் விற்பனை செய்யப்படுகிறது. மும்பையில் பெட்ரோல் விலை
91.34 ரூபாயாகவும், டீசல் விலை 80.10 ரூபாய்கவும் உள்ளது. மத்திய அரசின் விலைக் குறைப்பை ஏற்று மாநில
அரசுகளும் வாட் வரியில் குறைப்பு செய்தாலும் ரூ5 வரை விலைகுறையும். ஆனால், முக்கியமாக இதில் கவனிக்க
வேண்டியது என்னவெனில் ஏப்ரல், மே மாதங்களில் பெட்ரோல் விலை சென்னையில் ரூ76 ஆகதான் இருந்தது. ஆனால்,
கடந்த சில மாதங்களில் 10 பைசா, 20 பைசா என நாள்தோறும் உயர்த்தப்பட்டு தற்போது ரு87.33 வரை உயர்ந்துள்ளது. 

அதாவது 10 ரூபாய் வரை பெட்ரோல், டீசல் விலை சமீபத்தில் உயர்ந்துள்ள நிலையில், அதில் ரூ2.50 வரை
குறைக்கப்பட்டுள்ளது. அத்துடன், பெட்ரோல், டீசல் விலையில் இனிமேலும் விலையேற்றம் இல்லாமல் இருக்கும் என்று
கூற முடியாது. இருப்பினும், தற்போதையை விலை குறைப்பு சாமானியர்களுக்கு உடனடி பலனாகவே இருக்கும்.