இந்தியா

யாசின் மாலிக்கின் காஷ்மீர் விடுதலை இயக்கத்திற்கு மத்திய அரசு தடை

யாசின் மாலிக்கின் காஷ்மீர் விடுதலை இயக்கத்திற்கு மத்திய அரசு தடை

rajakannan

யாசின் மாலிக் தலைமையிலான ஜம்மு - காஷ்மீர் விடுதலை இயக்கத்தை பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் மத்திய அரசு தடை செய்துள்ளது. 

காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 40 சிஆர்பிஎப் வீரர்கள் கொல்லப்பட்டனர். இதற்கு பாகிஸ்தானிலிருந்து செயல்படும் ஜெய்ஷ்- இ- முகமது என்ற பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றது. இந்த அமைப்பினர் ஜம்மு-காஷ்மீரில் உள்ளவர்கள் மூலமாக இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்தத் தாக்குதலை தொடர்ந்து மத்திய அரசு கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

காஷ்மீரில் பிரிவினைவாத தலைவர்களுக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பை மத்திய அரசு திரும்பப் பெற்றது. அந்த வகையில் தற்போது, யாசின் மாலிக் தலைமையிலான ஜம்மு காஷ்மீர் விடுதலை இயக்கத்திற்கு தடை விதித்துள்ளது. ஜம்மு-காஷ்மீரில் பிரிவினைவாத நடவடிக்கைகளில் ஈடுபடுகிறது என்ற குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் தடை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

பொது பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கடந்த பிப்ரவரி 22ம் தேதி கைது செய்யப்பட்ட யாசின் மாலிக், தற்போது ஜம்முவின் கோட் பல்வால் சிறையில் இருக்கிறார். இந்த மாதத்தில் தடை செய்யப்பட்ட இரண்டாவது இயக்கம் இது ஆகும். முன்னதாக, காஷ்மீர் பிரிவினைவாத இயக்கங்களில் ஒன்றான ஜமாத்-இ-இஸ்லாமியா அமைப்புக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. யாசின் மாலிக் வீட்டில் சமீபத்தில் தேசிய புலனாய்வு அமைப்பினர் சோதனையில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.