மல்லிகார்ஜூன கார்க்கே - மோடி - அமித் ஷா புதிய தலைமுறை
இந்தியா

நலம் விசாரித்த பிரதமர்... பதிலடி கொடுத்த கார்கே... டென்ஷனான மத்திய அமைச்சர்கள்? என்ன நடந்தது?

உடல்நலம் பாதிக்கப்பட்ட காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவை பிரதமர் மோடி தொலைபேசியில் அழைத்து நலம் விசாரித்திருந்தார். உடல்நலன் தேறியவுடன், ‘நான் அவ்வளவு எளிதில் இறக்கப்போவதில்லை’ என்று கார்கே பதிலளித்திருப்பது தற்போது பேசுபொருளாக மாறியிருக்கிறது

PT WEB

ஜம்மு காஷ்மீரின் ஜஸ்ரோட்டாவில் நடைபெற்ற கூட்டத்தில் உரையாற்றியபோது, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவுக்கு தலைச்சுற்றல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, மருத்துவர்கள் குழு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளித்தது. குறைந்த ரத்த அழுத்தம் காரணமாக அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

உடல்நலம் பாதிக்கப்பட்ட காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பற்றிய செய்தியை அறிந்தவுடன் தொலைபேசியில் அவரை அழைத்து பிரதமர் நரேந்திர மோடி நலம் விசாரித்துள்ளார். அவ்வழைப்பில், விரைவில் உடல்நலம் தேறுவதற்கு மல்லிகார்ஜுன கார்கேவுக்கு பிரதமர் வாழ்த்து கூறியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்பின்னர் உடல்நலன் சீரானதும் பொதுக்கூட்டத்தில் பேசிய கார்கே, “எனக்கு 83 வயதாகி இருக்கிறது. நான் அவ்வளவு எளிதில் இறக்கப்போவதில்லை. பிரதமர் நரேந்திர மோடி பதவியிலிருந்து நீக்கப்படும் வரை நான் உயிரோடு இருப்பேன்” என்று பேசியுள்ளார்.

இதையடுத்து, கார்கேவின் பேச்சு பேசுபொருளானது. அந்தவகையில் கார்கேவின் பேச்சுக்கு எதிர்வினை ஆற்றிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, தன் எக்ஸ் தளப்பக்கத்தில், “நேற்று, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே அவர்களின் பேச்சு முற்றிலும் வெறுப்பால் நிறைந்தது; அவமானகரமானது. வெறுப்பின் உச்சமாக, ‘பிரதமர் மோடியை ஆட்சியில் இருந்து அகற்றிய பிறகுதான் நான் இறப்பேன்’ என்று கூறி தேவையில்லாமல் தனது தனிப்பட்ட உடல்நல விஷயங்களில் பிரதமர் மோடியை இழுத்திருக்கிறார். காங்கிரஸுக்கு பிரதமர் மோடி மீது எவ்வளவு வெறுப்பும் பயமும் இருக்கிறது, அவர்கள் எந்தளவுக்கு பிரதமரை பற்றியே தொடர்ந்து நினைத்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதை இது காட்டுகிறது.

கார்கே அவர்களின் ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, மோடி அவர்களோடு இணைந்து நானும் பிரார்த்தனை செய்கிறேன். கார்கே நீண்ட நாட்கள், ஆரோக்கியமாக வாழ நாங்கள் அனைவரும் பிரார்த்திக்கிறோம். அவர் பல்லாண்டு காலம் வாழட்டும், 2047ல் வளமையான பாரதம் உருவாவதை காணட்டும்” என்று பதிவிட்டுள்ளார்.

இதை ரீட்வீட் செய்த மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்,

“மத்திய அமைச்சர் அமித்ஷா சொன்னதுபோல, பிரதமர் மோடி மீது வெறுப்பை வெளிப்படுத்தும் ஒருவாய்ப்பையும் காங்கிரஸ் தலைமை தவறவிடாது. மல்லிகார்ஜுன கார்கேவின் பேச்சும் அப்படியானதுதான். கார்கேவின் நீண்ட ஆயுளுக்காக நாங்கள் இணைந்து பிரார்த்திக்கிறோம்; 2047ல் வளர்ந்த பாரதத்தை அவரும் காண விரும்புகிறோம்” என்று பதிவிட்டுள்ளார். இதையடுத்து இணையத்தில் பாஜக - காங்கிரஸ் தொண்டர்கள் இடையேயான வார்த்தைப்போரும் முற்றிவருகிறது.