மு.க.ஸ்டாலின், தர்மேந்திர பிரதான் Facebook
இந்தியா

குழந்தைகளுக்கு உலகத்தரத்திலான கல்வியை வழங்க மு.க.ஸ்டாலின் முன்வர வேண்டும்: தர்மேந்திர பிரதான் கடிதம்

அரசியல் வேறுபாடுகளை விலக்கிவிட்டு குழந்தைகளுக்கு உலகத்தரத்திலான கல்வி வழங்குவதற்காக பி.எம்.ஸ்ரீ புரிந்துணர்வு ஒப்பந்தத்தில், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கையெழுத்திட வேண்டும் என்று மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் வலியுறுத்தியுள்ளார்

PT WEB

அரசியல் வேறுபாடுகளை விலக்கிவிட்டு குழந்தைகளுக்கு உலகத்தரத்திலான கல்வி வழங்குவதற்காக பி.எம்.ஸ்ரீ புரிந்துணர்வு ஒப்பந்தத்தில், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கையெழுத்திட வேண்டும் என்று மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் வலியுறுத்தியுள்ளார்.

2023-24 நிதியாண்டில் சமக்ர சிக்ஷா திட்டத்தில் 4 தவணைகளில், 1876.15 கோடி ரூபாய் தமிழகத்துக்கு விடுவிக்கப்பட்டுள்ளதாக கடிதத்தில் தர்மேந்திர பிரதான் குறிப்பிட்டுள்ளார். 2024-25 ஆம் நிதியாண்டில் தமிழ்நாட்டுக்கு 4,305.66 கோடி ரூபாய் ஒதுக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

தற்போது வரை 32 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் பி.எம்.ஸ்ரீ புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளதாக கூறியுள்ள தர்மேந்திர பிரதான், கடந்த மார்ச் மாதம் 15-ஆம் தேதி இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட தமிழக அரசு விருப்பம் தெரிவித்திருந்த நிலையில், கடந்த ஜூலை மாதம் எழுதிய கடிதத்தில், தேசிய கல்விக் கொள்கையை நடைமுறைப்படுத்தும் அம்சத்தை விலக்கி குறிப்பிட்டிருந்தது ஆச்சரியம் அளித்ததாக கூறியுள்ளார்.

பிரகாசமான எதிர்காலத்தை உறுதி செய்ய, பி.எம் ஸ்ரீ ஒப்பந்தத்தில் தமிழக அரசு கையெழுத்திட வேண்டும் என்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு எழுதிய கடிதத்தில் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து, தனது சமூக வலைதளத்திலும் அவர் பதிவிட்டுள்ளார். ”தேசிய கல்விக்கொள்கை 2020-ன் கீழ் 21-ஆம் நூற்றாண்டின் கல்வியை வடிவமைக்க பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு அர்ப்பணித்துக் கொண்டுள்ளது. குழந்தைகளின் கல்வியில் அரசியல் நிழல் படியக்கூடாது. அரசியல் வேறுபாடுகளை புறந்தள்ளிவிட்டு குழந்தைகளுக்கு உலகத்தரத்திலான கல்வியை வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்வரவேண்டும். இல்லாவிட்டால் அது குழந்தைகளுக்குச் செய்யும் துரோகமாகிவிடும் .”என்று தர்மேந்திர பிரதான் குறிப்பிட்டுள்ளார்.