இந்தியா

தொழிலாளர்கள் சொந்த மாநிலங்களுக்கு செல்ல அனுமதி : உள்துறை அமைச்சகம்

தொழிலாளர்கள் சொந்த மாநிலங்களுக்கு செல்ல அனுமதி : உள்துறை அமைச்சகம்

webteam

வெளிமாநிலத் தொழிலாளர்களை அந்தந்த மாநிலங்களுக்கு அனுப்ப ஏற்பாடு செய்யப்பட்டு வருவதாக மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக மார்ச் 25 ஆம் தேதி முதல் நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. ஊரடங்கு திடீரென அமலுக்கு வந்ததால் புலம்பெயர்ந்து வெளிமாநிலங்களுக்கு வேலைக்காக சென்ற தொழிலாளர்கள் ஆங்காங்கே சிக்கிக் கொண்டனர். அவர்கள் தங்களை சொந்த ஊருக்கு அனுப்பி வைக்குமாறு கோரிக்கை விடுத்து வருகின்றனர். அதேபோல், சிலர் நடைபயணமாகவே பல நூறு கிலோமீட்டர் தூரம் பயணித்து வருகிறார்கள். இதுவொரு பெரிய சிக்கலாகவே உருவெடுத்துள்ளது.

இந்நிலையில், வெளிமாநிலத் தொழிலாளர்களை அந்தந்த மாநிலங்களுக்கு அனுப்ப ஏற்பாடு செய்யப்பட்டு வருவதாக மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக, “உரிய கட்டுப்பாடுகளை பின்பற்றி வெளி மாநிலங்களில் சிக்கியுள்ள தொழிலாளர்களை அழைத்துக் கொள்ளலாம். இருமாநிலங்களுக்கும் ஒருமித்த கருத்து ஏற்பட்டால் மட்டும் திரும்ப அழைத்துக் கொள்ள ஏற்பாடு செய்ய வேண்டும். வெளிமாநிலத்தில் சிக்கியுள்ள தொழிலாளர்கள், பக்தர்கள், சுற்றுலாப்பயணிகள், மாணவர்களை அழைத்துக் கொள்ளலாம். சிக்கியவர்களை அழைத்துக் கொள்ள மாநில அரசுகள் சிறப்பு அதிகாரிகளை நியமித்து நடவடிக்கை எடுக்கலாம். அழைத்துச் செல்ல பயன்படுத்தப்படும் பேருந்துகளில் கிருமிநாசினி தெளிப்பு, தனிநபர் இடைவெளி அவசியம்” என்று உள்துறை அமைச்சகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொது முடக்கத்தால் சிக்கியுள்ள வெளிமாநிலத்தவர்களை சொந்த ஊருக்கு திருப்பியனுப்ப மகாராஷ்டிர அரசு ஏற்பாடு செய்துள்ளது. தொழிலாளர்களை அழைத்து செல்வது பற்றி பிற மாநில முதல்வர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக அம்மாநில உள்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். மும்பையில் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் பலர் சிக்கியுள்ள நிலையில், உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக் தெரிவித்துள்ளார்.