தமிழ்நாடு வக்ஃப் வாரியம் pt web
இந்தியா

வக்ஃப் வாரிய சொத்துக்கள்: 40 சட்டத்திருத்தங்கள்.. வலுத்துவரும் எதிர்ப்புகள்.. முழு விவரம்!

வக்ஃப் வாரிய சொத்துக்கள் குறித்து, மத்திய அரசு சட்டத்திருத்தம் மேற்கொள்ள உள்ளதாக வெளியாகியுள்ள செய்தியின் மூலம் புதிய சர்ச்சை வெடித்துள்ளது. இதன் பின்னணி குறித்தும் வலுத்து வரும் எதிர்ப்புகள் குறித்தும் பார்க்கலாம்...

PT WEB

செய்தியாளர் கணபதி சுப்ரமணியம்

வக்ஃப் வாரியம்

இஸ்லாமியர்களின் சமூக, பொருளாதார நலன்கள், சொத்துகளின் பராமரிப்பே வக்ஃப் வாரியத்தின் நோக்கம். இதன் அதிகாரங்களை மறுசீரமைப்பதற்காக சட்டத்திருத்தம் கொண்டு வர, மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான ஒப்புதலையும் மத்திய அமைச்சரவை வழங்கியுள்ளது. வக்ஃப் கவுன்சில் மற்றும் மாநில வக்ஃப் வாரியங்களின் அமைப்பு முறையில் மாற்றம், மகளிருக்கு பிரதிநிதித்துவம் என்பன உள்ளிட்ட 40 திருத்தங்களை மசோதா முன்மொழியலாம் என டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சட்டத்திருத்த மசோதா மிக விரைவில் தாக்கல் செய்யப்படும் என்றும் பரபரப்பாக பேசுகிறது டெல்லி அரசியல் வட்டாரங்கள்.

இதன் மூலம், மத்திய பாஜக அரசு, சிறுபான்மையினருக்கு எதிராக செயல்படுவதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன. மதரீதியில் புதிய சர்ச்சை வெடித்துள்ளது. ஆனால், வக்ஃப் வாரிய சட்டத்திருத்தம் குறித்து, மத்திய அரசு இதுவரை எந்த அறிவிப்பையும் அதிகாரப்பூர்வமாக வெளியிடவில்லை.

தொடரும் சர்ச்சைகள்

பல தசாப்தங்களுக்கு முன்பு, தாஜ்மஹால் தங்களுக்கு சொந்தமானது என்று, ஷியா வக்ஃப் வாரியம் அறிவித்ததால், சர்ச்சை வெடித்தது. அப்போது, தாஜ்மஹால் ASI கட்டுப்பாட்டில் தொடரும் என, ஒருவழியாக முடிவு செய்யப்பட்டது. ஆனாலும், வக்ஃப் வாரிய சட்டத்தில் திருத்தங்கள் தேவை என்கிற கோரிக்கை வலுத்தது. தமிழ்நாட்டில் வேலூர் அருகே, திருச்செந்துறை என்ற ஒரு கிராமமே, வக்ஃப் வாரியத்துக்கு சொந்தமானது என சர்ச்சை நிலவுகிறது. ராஜஸ்தானிலும் டெல்லி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் இதே போன்ற சர்ச்சைகள் தொடர்கின்றன.

1954 ல் இயற்றப்பட்ட வக்ஃப் சட்டத்தின்படி, ஒரு சொத்து வஃக்பு வாரியத்தின் கீழ் சென்றுவிட்டால், அந்த சொத்தின் உரிமை குறித்த விவகாரங்களை, வஃக்பு வாரிய தீர்ப்பாயத்தில்தான் முறையிட முடியும். நீதிமன்றத்தில் முறையிட முடியாது.

சட்டத்திருத்தம்

இந்த நிலையை மாற்றி, வக்ஃப் வாரிய சொத்துக்களை மாவட்ட ஆட்சியரிடம் பதிவு செய்ய வேண்டுமென சட்டத்திருத்தம் கொண்டு வரப்பட உள்ளதாக தெரிகிறது. பல்வேறு மாநிலங்களில் வக்ஃப் சொத்துக்கள் தொடர்பான சச்சரவுகள் நிலவுவதே இதற்கு காரணம் என்கிறார்கள். சட்டத்திருத்தத்திற்குப் பிறகு, இப்படியான சச்சரவுகள் நேரிட்டால், குறிப்பிட்ட சொத்துகள் வக்ஃபு வாரியத்துக்கு சொந்தமானதா இல்லையா என்பதை அரசின் ஆவணங்கள் மூலம் உறுதிபடுத்தலாம்.

புதிய நாடாளுமன்றம்

நன்கொடையாக அளிக்கப்படும் நிலங்களை மத்திய வக்ஃப் தலைமை அமைப்பு மற்றும் பல்வேறு மாநிலங்களில் செயல்படும் 30 வக்ஃப் வாரியங்கள் நிர்வகிக்கின்றன. இவற்றின் கீழ், கிட்டத்தட்ட 8 லட்சம் ஏக்கர் நிலங்கள் உள்ளன. இந்த வகையில், பாதுகாப்புப் படைகள் மற்றும் ரயில்வேயைத் தொடர்ந்து, வக்ஃப் வாரியங்களே, நில உரிமையில் மூன்றாவது இடத்தில் உள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது.

நிலவும் குற்றச்சாட்டுகள்

வக்ஃப் வாரியத்திடம் உள்ள நிலங்களை விற்க முடியாது. நிலங்களை குத்தகைக்கு விடுவதன் மூலமோ, நிலங்களில் உள்ள கட்டடங்களை வாடகைக்கு விடுவதன் மூலமோ, ஈட்டப்படும் வருமானம் முழுவதையும், ஏழைகள், பெண்கள் மற்றும் குழந்தைகளின் நலனுக்காக மட்டுமே செலவிட வேண்டும் என்பது வக்ஃப் வாரிய விதி. ஆனால், இந்த வருமானத்தில், ஏழைகளோ, பெண்களோ, குழந்தைகளோ பயனடையவில்லை என ஒரு புறம் குற்றச்சாட்டுகள் நிலவுகின்றன.

இதன் காரணமாகவே, வக்ஃப் வாரியத்தில் மகளிரையும் உறுப்பினர்களாக சேர்க்கும் விதமான சட்டத்திருத்தம் அமல்படுத்தப்படும் என மத்திய அரசு அதிகாரிகள் மூலம் தெரியவருகிறது. மேலும் வக்ஃப் வாரிய நிலங்கள் குறித்த சச்சரவுகளை நீதிமன்றம் மூலம் தீர்த்து வைப்பதற்கான அம்சங்களும் சட்டத்திருத்தத்தில் இடம்பெறுமென எதிர்பார்க்கப்படுகிறது. வக்ஃப் வாரிய நிலங்கள் தொடர்பான சட்டமன்ற விதிகளில் போதிய தெளிவு தேவை என கருதப்படுவதால், இதுபோன்ற 40 திருத்தங்கள் கொண்டுவரப்பட உள்ளதாகவும் அதிகாரிகள் தரப்பில் அறிய வருகிறது. மேலும், சட்டத்தின் பெயரிலும் மாற்றம் கொண்டு வரப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.