இந்தியா

மருத்துவப் படிப்பில் 'கோவிட் போராளிகளின் வாரிசு'களுக்கு சிறப்பிடம்: மத்திய அரசு அறிவிப்பு

மருத்துவப் படிப்பில் 'கோவிட் போராளிகளின் வாரிசு'களுக்கு சிறப்பிடம்: மத்திய அரசு அறிவிப்பு

Sinekadhara

2020-21 கல்வியாண்டு மருத்துவ சேர்க்கையில் ‘கோவிட் போராளிகளின் வாரிசு' என்னும் புதிய பிரிவு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

வரும் 2020-21 கல்வியாண்டில் மத்திய இருப்பின் எம்.பி.பி.எஸ் இடங்களின் கீழ் மருத்துவச் சேர்க்கையில் ‘கோவிட் போராளிகளின் வாரிசு' என்ற புதிய பிரிவை அறிமுகப்படுத்த அரசு முடிவெடுத்திருப்பதாக மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் டாக்டர் ஹர்ஷ் வர்தன் அறிவித்துள்ளார்.

கோவிட் சிகிச்சை மற்றும் மேலாண்மையில்,கோவிட் போராளிகளின் சிறப்பான பங்களிப்பைப் போற்றும் வகையிலும், அவர்களை கௌரவிக்கும் நோக்கத்துடனும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் கூறினார். “தங்களது கடமை மற்றும் மனிதநேயத்தை காப்பதற்காக தன்னலம் பாராமல் முழு ஈடுபாட்டுடன் பணியாற்றும் கோவிட் போராளிகளின் தியாகத்தை இது கௌரவிக்கும்” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

மத்திய இருப்பின் இடங்களின்மூலம் கோவிட்-19 காரணமாக தங்கள் இன்னுயிரை நீத்த அல்லது கோவிட்-19 சம்பந்தமான பணியின்போது விபத்தினால் உயிரிழந்தோரின் வாரிசுகள் தேர்வு செய்யப்படுவார்கள்.

ரூ.50 லட்சம் தொகுப்பிலான ஆயுள் காப்பீட்டுத் திட்டத்தை போராளிகளுக்கு அறிவித்தபோது, இந்திய அரசு கோவிட் போராளிகள் குறித்த விளக்கத்தை அளித்துள்ளதை அமைச்சர் நினைவு கூர்ந்தார். “கோவிட் போராளிகள் என்போர், கோவிட் நோய் தொற்றினால் பாதிக்கப்பட்டோருடன் நேரடித் தொடர்பிலோ அல்லது நோய்த்தொற்று பாதிக்கும் அபாயம் உள்ள சமூக சுகாதாரப் பணியாளர்கள் உள்ளிட்ட பொது சுகாதாரத் துறையினர் ஆவர்.

தனியார் மருத்துவ ஊழியர் மற்றும் ஓய்வு பெற்ற/ தன்னார்வலர்/ உள்ளூர் நகர்மன்ற அமைப்பினர்/ ஒப்பந்ததாரர்கள்/ தினக்கூலி தொழிலாளர்கள்/ மத்திய மாநில மருத்துவமனைகள்/ மத்திய/ மாநில/ யூனியன் பிரதேசங்களின்கீழ் இயங்கும் தன்னாட்சி மருத்துவமனைகள்/ எய்ம்ஸ் மற்றும் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நிறுவனங்கள்/கோவிட்-19 தொடர்பான சிகிச்சைகள் வழங்கும் மத்திய அரசு மருத்துவமனைகள் ஆகியவற்றில் ஒப்பந்த சேவை புரியும் பணியாளர்கள் ஆகியோர் இதில் அடங்குவர்” என்று அமைச்சர் தெரிவித்துள்ளார். இந்தப் பிரிவினருக்கான தகுதிகள் குறித்து மாநில/ யூனியன் பிரதேச அரசுகள் வெளியிடும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

கல்வியாண்டு 2020-21ல் மத்திய இருப்பின் 5 எம்.பி.பி.எஸ் இடங்கள் இந்தப் பிரிவுக்காக ஒதுக்கப்பட்டுள்ளன.