இந்தியா

மேற்கு வங்க அரசின் அதிகாரத்தில் கை வைக்கும் மத்திய அரசு? - முற்றுகிறது மோதல்!

மேற்கு வங்க அரசின் அதிகாரத்தில் கை வைக்கும் மத்திய அரசு? - முற்றுகிறது மோதல்!

Veeramani

பாஜக - திரிணாமுல் காங்கிரஸ் இடையேயான மோதல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பாஜகவின் தேசியத் தலைவர் நட்டாவின் கான்வாய் தாக்கப்பட்ட விவகாரத்தில் மத்திய அரசு நடவடிக்கை எடுக்க தொடங்கியுள்ளது.

கொல்கத்தாவில் உள்ள டைமண்ட் ஹார்பர் பகுதியில் பாஜக பொதுக் கூட்டத்துக்குச் சென்று கொண்டிருந்தபோது பாஜக தலைவர் நட்டாவின் கான்வாய் கற்களால் தாக்கப்பட்டதை அடுத்து, ஆளும் டி.எம்.சி அரசாங்கத்திற்கும் பாஜகவுக்கும் இடையே வார்த்தைப்போர் முற்றி வருகிறது. இந்த விவகாரத்தில் மேற்கு வங்க ஆளுநர் ஜகதீப் தங்கர், மத்திய அரசுக்கு அறிக்கை தாக்கல் செய்துள்ளார். அதில், மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு விட்டதாக குறிப்பிட்டுள்ளார்.

ஆளுநரின் அறிக்கையை அடுத்து மத்திய உள்துறை அமைச்சகம், அம்மாநில டிஜிபி மற்றும் தலைமை செயலாளரை டிசம்பர் 14 அன்று ஆஜராக சொல்லி உத்தரவிட்டது. மேலும் நட்டா வருகையின்போது ஏற்பட்ட பாதுகாப்பு குறைபாடுகள், சூழ்நிலைகள் மற்றும் அதில் என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று மத்திய உள்துறை அமைச்சகம், மேற்கு வங்க அரசிடம் அறிக்கை கோரி இருந்தது. இதற்கிடையே, இந்த விவகாரத்தில் புதிய திருப்பமாக நட்டாவின் பாதுகாப்பைக் கையாண்ட மேற்கு வங்க கேடரின் ஐ.பி.எஸ் அதிகாரிகள் மூன்று பேர் மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு அழைக்கப்பட்டு, மூன்று அதிகாரிகளும் உள்துறை அமைச்சகத்தில் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.

வழக்கமாக ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் அதிகாரிகளை மத்திய அரசு பணிக்கு அமர்த்த வேண்டும் என்றால், மாநில அரசின் அனுமதி பெற வேண்டும். ஆனால், இந்த விவகாரத்தில் மத்திய உள்துறை அப்படி எந்த அனுமதியும் வாங்காமல் அவர்களை மத்திய அரசு பணியில் அமர்த்தியுள்ளது. இது சர்ச்சையை ஏற்படுத்த, அனைத்து இந்திய சேவை அதிகாரிகளையும் நிர்வகிக்கும் விதிகளின் கீழ் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்று உள்துறை அதிகாரி விளக்கம் கொடுத்துள்ளார்.

ஆனால், மூத்த திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. கல்யாண் பானர்ஜி சனிக்கிழமை மத்திய உள்துறை செயலாளர் அஜய் பல்லாவுக்கு ஒரு கடிதம் எழுதினார். அதில், ``இது அரசியல் நோக்கத்திற்காக எடுக்கப்பட்ட ஒரு நடவடிக்கையாகத் தெரிகிறது, பாரதிய ஜனதா கட்சியின் அரசியல் பிரமுகரான உங்கள் அமைச்சரின் உத்தரவின் பேரில், நீங்கள் அந்தக் கடிதத்தை வெளியிட்டுள்ளீர்கள். நீங்கள் மேற்கு வங்காள அதிகாரிகளுக்கு அரசியல் பகையின் கீழ் அழுத்தம் கொடுக்க விரும்புகிறீர்கள். கூட்டாட்சி கட்டமைப்பில் நீங்கள் தலையிடுகிறீர்கள் என்று தெரிகிறது.

அரசியலமைப்பின் ஏழாவது பட்டியலின் கீழ், சட்டம் ஒழுங்கு மாநிலங்களின் அதிகார எல்லைக்கு உட்பட்டது என்பதை நாங்கள் உங்களுக்கு தெரிவிக்க விரும்புகிறோம். மேற்கு வங்க தலைமை செயலாளரும், போலீஸ் டிஜிபியை விசாரணைக்கு அழைப்பது ‘அரசியல் நோக்கம் கொண்டது’. மாநில நிர்வாகத்தை அச்சுறுத்துவதற்கு இதுபோன்ற நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்து வருகிறது" என்று குற்றம் சுமத்தி இருக்கிறார். இதனால் பாஜக - திரிணாமுல் காங்கிரஸ் அரசு இடையேயான மோதல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.