இந்தியா

இரண்டு மலையாள சேனல்களுக்கு விதிக்கப்பட்ட 48 மணி நேரத் தடை நீக்கம்

webteam

டெல்லியில் நடைபெற்ற வன்முறை தொடர்பான ஒளிபரப்பிற்காக இரண்டு மலையாள செய்தி சேனல்களுக்கு விதிக்கப்பட்ட 48 மணி நேரம் தடை நீக்கம் செய்யப்பட்டுள்ளது.

கடந்த மாதம் 25ம் தேதி டெல்லியில் நடைபெற்ற வன்முறை தொடர்பான செய்திகளை ஒளிபரப்பியது தொடர்பாக ஏசியாநெட் நியூஸ் மற்றும் மீடியா ஒன் சேனல்களுக்கு வெள்ளிக்கிழமை இரவு 7:30 மணியிலிருந்து 48 மணி நேரத்திற்கு தடை விதிப்பதாக தகவல் ஒலிபரப்புத்துறை தெரிவித்தது.

ஏசியாநெட் நியூஸ் ஒரு வழிபாட்டுத்தலத்தின் மீதான தாக்குதலை மிகைப்படுத்தி காட்டியதாகவும், ஒரு சமுதாயத்திற்கு சாதகமாக செயல்பட்டது போல் தெரிவதாகவும் தகவல் ஒலிபரப்புத்துறை கூறியிருந்தது. மேலும், அதன் தகவல் ஒலிபரப்புத் துறையில் உத்தரவில், மீடியா ஒன் தொலைக்காட்சியின் செய்திகள் சிஏஏ ஆதரவாளர்களின் கலவரத்தின் மீது மட்டுமே கவனத்தை குவிப்பதாக இருந்ததாகவும் கூறப்பட்டிருந்தது. இரண்டு சேனல்களில் செய்தியாளர்களின் வார்த்தைகள் இரு சமுதாயத்திடையேயான நல்லிணக்கத்தை குலைக்கும் வகையில் இருந்ததாகவும் தகவல் ஒலிபரப்புத்துறை தெரிவித்தது.

ஏசியாநெட் நியூஸ் மற்றும் மீடியா ஒன் சேனல்களின் ஒளிபரப்புக்கு தடை விதிக்கப்பட்டிருப்பது கருத்து சுதந்திரத்தின் மீது நடத்தப்பட்ட நேரடித் தாக்குதல் என சென்னை பத்திரிகையாளர் மன்றம் கண்டனம் தெரிவித்தது. இதேப் போல் பல்வேறு பத்திரிகையாளர் சங்கங்களும் தங்கள் எதிர்ப்பை பதிவு செய்தன.

இந்நிலையில், ஏசியாநெட் நியூஸ் மற்றும் மீடியா ஒன் சேனல்களின் ஒளிபரப்புக்கு விதிக்கப்பட்டிருந்த 48 மணி நேரம் தடை நீக்கப்பட்டுள்ளது. தடை நீக்கப்பட்டதை அடுத்து மீண்டும் இரண்டு சேனல்களும் தற்போது ஒளிபரப்பாகி வருகிறது.