கடந்த 2019 ஆகஸ்டில் ஜம்மு- காஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்து முடிவுக்கு கொண்டு வரப்பட்டு இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டதை தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஜம்மு மற்றும் காஷ்மீர் பிரதேசத்தில் பாதுகாப்புகாரணங்களுக்காக துணை ராணுவ படைகள் நிறுத்தப்பட்டன.
இந்நிலையில் மத்திய உள்துறை அமைச்சகத்தின் பரிந்துரையை அடுத்து பாதுகாப்பு பணியிலிருந்த துணை ராணுவத்தினர் திரும்புமாறு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட அதிகாரிகள் அனைவரும் மீண்டும் அவர்களது பழைய பணியிடத்திற்கே திரும்புமாறு மத்திய அரசு வழிகாட்டியுள்ளது.
இந்த உத்தரவின் படி மத்திய ரிசர்வ் போலீஸ் படை, மத்திய தொழில்துறை பாதுகாப்பு படை, எல்லை பாதுகாப்பு படை மற்றும் சாஸ்திர சீமா பால் என 100 குழுக்கள் திரும்ப பெறப்பட்டுள்ளன.
மே மாதத்தில் உள்துறை அமைச்சகம் ஜம்மு மற்றும் காஷ்மீரிலிருந்து 10 சிஏபிஎஃப் கம்பெனிகளை வாபஸ் பெற்றது. கடந்த சில மாதங்களாக யூனியன் பிரேதசத்தின் பாதுகாப்பு நிலைமையை மத்திய அரசு கண்காணித்து பாதுகாப்பு பணியில் உள்ள படையினரை திரும்ப பெற்றுள்ளது.
இருப்பினும் சி.ஆர்.பி.எஃப் பிரிவை சேர்ந்த சுமார் 60 பட்டாலியன்கள் இந்த யூனியன் பிரேதசங்களில் பாதுகாப்பு பணியில் தற்போது ஈடுபட்டுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.