இந்தியா

‘மனிதர்களால் இத்தனை யானைகள் கொல்லப்பட்டுள்ளதா?’ - மத்திய அரசு கொடுத்த அதிர்ச்சி விவரம்!

PT

“மத்திய அரசின் கணக்கெடுப்பின் படி இந்தியாவில் 29 ஆயிரம் யானைகள் உள்ளது; 2019-2022 காலக்கட்டத்தில் 274 யானைகள் மனிதர்களால் கொல்லப்பட்டுள்ளது” என மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது.

நாட்டில் மனிதர்களால், யானைகள் கொல்லப்படும் நிகழ்வு அதிகரித்து உள்ளதா என்றும், இந்தியாவில் உள்ள மொத்த யானைகளின் எண்ணிக்கை குறித்தும் மக்களவையில் எழுத்துப்பூர்வமாக கேள்வி எழுப்பட்டது. இதற்குப் பதிலளித்துள்ள மத்திய வனத்துறை இணை அமைச்சர் அஸ்வினி குமார் சௌபே, மத்திய வனத்துறை அமைச்சகத்திடம் உள்ள தகவலின் படி, தமிழகத்தில் 2,761 யானைகள் உட்பட ஒட்டு மொத்த நாட்டில் 29,964 யானைகள் உள்ளதாக தெரிவித்துள்ளார்.

மேலும், 2019-2022 காலகட்டத்தில் யானைகள் தாக்கி 1,581 மனிதர்கள் உயிரிழந்து உள்ளதாகவும், மனிதர்களால் 274 யானைகள் கொல்லப்பட்டு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில், ரயிலில் மோதி 41 யானைகளும், மின்சாரம் தாக்கி 198 யானைகளும், வேட்டையாடப்பட்டதன் காரணமாக 27 யானைகளும் மற்றும் 8 யானைகள் விஷம் வைத்து கொல்லப்பட்டு உள்ளதாகவும் மத்திய அரசின் எழுத்துப்பூர்வ பதிலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

யானைகள் வாழ்விடத்தை பாதுகாக்க மத்திய அரசு மாநில வனத்துறை அமைச்சகங்களுடன் இணைந்து பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக, யானைகள் மனிதர்கள் வாழ்விடத்தை நோக்கி வராமல் இருக்க, யானைகளுக்கு தேவையான உணவு மற்றும் நீர் உள்ளிட்டவை யானைகள் வாழ்விடத்திலே கிடைக்கும் திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.