சாதிவாரி கணக்கெடுப்பு  முகநூல்
இந்தியா

சாதிவாரி கணக்கெடுப்பு | தீவிர ஆலோசனை நடத்தும் மத்திய அரசு!

கணபதி சுப்ரமணியம்

கொரோனா பெருந்தொற்று காரணமாக மக்கள்தொகை கணக்கீடு தாமதப்பட்டுள்ள நிலையில், இந்த வருடம் மத்திய அரசு அடுத்த மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இத்துடன் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படுமா என்பது இன்னும் முடிவு செய்யப்படவில்லை என்று மத்திய அரசு அதிகாரிகள் தெரிவிக்கிறார்கள். பீகார் மற்றும் கர்நாடகா மாநிலங்களில் ஏற்கெனவே சாதிவாரி கணக்கீடு நடத்தப்பட்டுள்ளன.

பீகார் மாநில புள்ளி விவரங்கள் வெளியிடப்பட்ட நிலையில், கர்நாடக மாநில புள்ளி விவரங்கள் இன்னும் வெளிவரவில்லை. இந்நிலையில் தெலுங்கானா, தமிழ்நாடு, மேற்குவங்கம், மற்றும் கேரளா உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஆட்சி செய்யும் மாநிலங்களில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கீடு தேவை என வலியுறுத்தப்பட்டு வருகிறது. திமுக இந்த கோரிக்கையை ஆதரித்து வருகிறது. இதுவரை நடத்தப்பட்ட மக்கள்தொகை கணக்கீடுகளில், நாடு முழுவதும் பட்டியலினத்தவர் மற்றும் பழங்குடிகள் மக்கள்தொகை மட்டுமே கணக்கிடப்பட்டுள்ளது.

ஓபிசி பிரிவில் உள்ள பல்வேறு சமுதாயத்தினரின் விவரங்கள் தனித்தனியே சேகரிக்கப்படவில்லை. இதேபோல பல பிரிவினர்களின் மக்கள்தொகை புள்ளி விவரங்களும் சேகரிக்கப்படவில்லை. அனைத்து சமுதாயங்களுக்கும் புள்ளிவிவரங்கள் சேகரிக்கப்பட்டால் மட்டுமே இடஒதுக்கீடு தொடர்பான புதிய முடிவுகள் சட்டரீதியாக நீதிமன்றங்களால் ஏற்றுக் கொள்ளப்படும் என கருதப்படுகிறது. 2011 ஆம் வருடத்திலேயே மன்மோகன் சிங் அரசு சாதிவாரி புள்ளி விவரங்களை சேகரித்தது, ஆனால் அந்த புள்ளி விவரங்கள் வெளியிடப்படவில்லை.

சாதிவாரி கணக்கெடுப்பு

அந்தப் புள்ளி விவரங்களில் பல குழப்பங்கள் உள்ளதாக 2021 ஆம் வருடத்தில் நரேந்திர மோடி அரசு உச்சநீதிமன்றத்தில் பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்துள்ளது. ஆகவே உள்ஒதுக்கீடு போன்ற முடிவுகளை மாநில அரசுகள் மற்றும் மத்திய அரசால் எடுக்கப்பட்டாலும், நீதிமன்றத்தில் அத்தகைய முடிவுகளுக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டால், மக்கள்தொகை கணக்கீடு இல்லாதது அத்தகைய இட ஒதுக்கீடுகளுக்கு எதிராக அமையும் என கருதப்படுகிறது.