இந்தியா

நிலைமை சீரடைந்தவுடன் ஜம்மு காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து - மத்திய அரசு

நிலைமை சீரடைந்தவுடன் ஜம்மு காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து - மத்திய அரசு

JustinDurai
காஷ்மீரில் சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டபின் தீவிரவாத தாக்குதல்கள் குறைந்துள்ளதாக மத்திய உள்துறை இணை அமைச்சர் நித்யானந்த் ராய் தெரிவித்துள்ளார்.
ஜம்மு காஷ்மீரில் நிலைமை சீரடைந்தவுடன் சரியான நேரத்தில் மாநில அந்தஸ்து வழங்கப்படும் என மத்திய அரசு நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளது. மாநிலங்களவையில் கேள்விகளுக்கு எழுத்துப்பூர்வமாக பதிலளித்த மத்திய உள்துறை இணை அமைச்சர் நித்யானந்த் ராய், மத்திய அரசின் நிலைப்பாட்டை விளக்கினார். காஷ்மீரில் சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டபின் தீவிரவாத தாக்குதல்கள் குறைந்துள்ளதாகவும் அமைச்சர் புள்ளி விவரங்களுடன் விளக்கினார்.
அரசமைப்பு மாற்றங்கள் மற்றும் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் ஆகிய இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரித்ததை தொடர்ந்து, தேச பாதுகாப்பு மற்றும் ஜம்மு காஷ்மீர் பாதுகாப்பு ஆகியவற்றை கருத்தில் கொண்டு, இணையம் மற்றும் கைபேசி சேவைகள் போன்ற தொலைதொடர்பு வசதிகளுக்கு தற்காலிக கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.
அவ்வப்போது நிலைமை ஆய்வு செய்யப்பட்டு, கட்டுப்பாடுகள் படிப்படியாக தளர்த்தப்பட்டு, 2021 பிப்ரவரி 5 முதல் ஒட்டுமொத்த ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்திற்கும் 4ஜி இணைய சேவைகள் மீண்டும் வழங்கப்பட்டன. தீவிரவாத சம்பவங்கள் 2019-ஆம் வருடத்துடன் ஒப்பிடும்போது 2020-ல் 59 சதவீதமும், 2020 ஜூன் வரையிலான சம்பவங்களுடன் ஒப்பிடும்போது 2021 ஜூன் வரை, 32 சதவீதமும் குறைந்துள்ளன.
வர்த்தக நிறுவனங்கள், பொது போக்குவரத்து, அரசு அலுவலகங்கள், கல்வி நிலையங்கள், மருத்துவமனைகள் உள்ளிட்டவை ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் வழக்கம்போல் இயங்கி வருகின்றன. பயங்கரவாதத்தை முற்றிலும் பொறுத்துக் கொள்ளாத கொள்கையை பின்பற்றி வரும் அரசு, தீவிரவாதத்தை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது என நித்யானந்த ராய் ஆகி தெரிவித்தார்.