இந்தியா

பாகிஸ்தான் வீரர்களுக்கு விசா வழங்க சம்மதம் - மத்திய அரசு

பாகிஸ்தான் வீரர்களுக்கு விசா வழங்க சம்மதம் - மத்திய அரசு

webteam

பிற நாடுகளைச் சேர்ந்த தகுதியான வீரர்கள் அனைவரும் இந்தியாவில் நடைபெறும் சர்வதேச போட்டிகளில் பங்கேற்க அனுமதிக்கப்படுவர் என மத்திய அரசு உறுதி அளித்துள்ளது. இதன் மூலம் பாகிஸ்தான் வீரர்கள் இந்தியாவில் போட்டிகளில் பங்கேற்பதில் இருந்த முட்டுக்கட்டை விலகியுள்ளது.

இந்திய ஒலிம்பிக் சங்கம் மற்றும் சர்வதேச ஒலிம்பிக் கமிட்டிக்கு மத்திய அரசு எழுதியுள்ள கடிதத்தில் இதற்கான உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் சர்வதேச போட்டிகள் நடைபெறும்போது, அதில் பங்கேற்கத் தகுதி பெற்ற வீரர், வீராங்கனைகள் எந்த நாடுகளைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும், அவர்களுக்கு விசா வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

முன்னதாக கடந்த பிப்ரவரியில் புல்வாமா தாக்குதலை காரணம் காட்டி, துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் பங்கேற்க பாகிஸ்தானைச் சேர்ந்த 3 பேருக்கு மத்திய அரசு விசா வழங்க மறுத்தது. அதன் எதிரொலியாக இந்தியாவில் நடைபெறவிருந்த உலகக்கோப்பை துப்பாக்கிச் சுடுதல் போட்டி, ஜூனியர் டேவிஸ் கோப்பை டென்னிஸ், ஃபெட் கோப்பை டென்னிஸ், ஆசி‌ய ஜூனியர்‌‌ மல்யுத்தம் உள்ளிட்ட போட்டிகளுக்கு தடைவிதிக்கப்பட்டது. 

இந்த நிலையில், தகுதியான அனைத்து வீரர்களும் இந்தியாவில் நடைபெறும் போட்டிகளில் பங்கேற்க அனுமதிக்கப்படுவர் என மத்திய அரசு உறுதி அளித்திருக்கிறது. இதனால் இந்தியாவில் அடுத்த நடத்த திட்டமிடப்பட்டிருந்த சர்வதேச போட்டிகளுக்கான தடை நீக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.