தமிழகத்தில் நெய்வேலி, ராமநாதபுரம், வேலூர், தஞ்சாவூர் ஆகிய இடங்களில் புதிய விமான நிலையங்கள் அமைக்கும் திட்டத்தை செயல்படுத்த விமான நிறுவனங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
குறைந்த கட்டணத்தில் விமானப் போக்குவரத்துச் சேவை வழங்கும் உதான் திட்டத்தை மத்திய அரசு 2017ம் ஆண்டு கொண்டு வந்தது. குறைந்த கட்டணம், உள்நாட்டு பயணத்திற்கான விமான நிலையங்களை இணைத்தல் உள்ளிட்ட பல திட்டங்கள் உதய் திட்டத்தின் கீழ் வருகின்றன. இந்நிலையில் மாநிலங்களவையில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ எழுப்பிய கேள்விக்கு மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் புரி விளக்கம் அளித்தார்.
அதில், தமிழகத்தில் நெய்வேலி, ராமநாதபுரம், வேலூர், தஞ்சாவூர் ஆகிய இடங்களில் புதிய விமான நிலையங்கள் அமைக்கும் திட்டத்தை செயல்படுத்த விமான நிறுவனங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளது. உதான் திட்டத்தின் கீழ் பறக்கும் விமானங்களுக்கு விதிக்கப்படும் வரிகள் மூலமே, திட்டத்துக்கு நிதி திரட்டப்படுகிறது என தெரிவித்தார்.
மேலும் விமானங்களில் பெண்களுக்கு எதிரான சீண்டல்கள் பற்றிய புகார் குறித்த தகவல்களை தலைமை இயக்குநருக்கு அனுப்ப வேண்டும் என விசாகா சட்டத்தில் விதிமுறை இல்லாததால், அதுகுறித்த தகவல்கள் தங்களிடம் இல்லை எனவும் அமைச்சர் கூறியுள்ளார்.