சூப்பர் மார்க்கெட் புதிய தலைமுறை
இந்தியா

சூப்பர் மார்க்கெட்டில் மருத்துவர் பரிந்துரையின்றி மாத்திரைகள் விற்பனை செய்ய மத்திய அரசு திட்டம்?

PT WEB

மருத்துவரின் பரிந்துரை சீட்டு இன்றி மருந்துகளை வகைப்படுத்தி சூப்பர் மார்க்கெட்டுகளில் விற்பனை செய்ய அனுமதி வழங்க மத்திய அரசு திட்டமிட்டிருக்கிறது. இதற்கு தமிழக மருந்து வியாபாரிகள் சங்கம் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

‘சளி மற்றும் இருமல் மருந்துகள், வலி ஆயின்மெண்ட்கள் ஆகியவற்றை வாங்க மருந்தகங்களுக்குதான் செல்ல வேண்டி உள்ளது. இரவு நேரங்களில் இந்த வகை மருந்துகளை வாங்குவதில் சிரமம் உள்ளது. குறிப்பாக கிராமப்புறங்களில் மிகுந்த சிரமம் உள்ளது’ போன்ற பிரச்னைகளுக்கு தீர்வு காணும் விதமாக, மத்திய அரசு இந்தப் புதிய முயற்சியை எடுத்துள்ளது என சொல்லப்படுகிறது.

அதன்படி மருத்துவரின் பரிந்துரை சீட்டு இன்றிகூட மருந்துகளை பெறுவதற்கான வழிகள் செய்யப்படுகிறதாம். இதற்காக மருந்துகளை சாதாரண கடைகள், சூப்பர் மார்க்கெட்டுகளில் விற்பனை செய்வதற்கான அனுமதியை வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மத்திய அரசின் இத்தகைய முயற்சிக்கு தமிழ்நாடு மருந்து வியாபாரிகள் சங்கம் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. மருத்துவர் பரிந்துரையின்றி வழங்கப்படும் மருந்துகளை சாதாரண கடைகளில் விற்பனை செய்தால், அதை சிலர் தவறாக பயன்படுத்த வாய்ப்பு உள்ளதாக கூறுகிறார் தமிழ்நாடு மருந்து வியாபாரிகள் சங்கத் தலைவர் நடராஜன்.

மேலும், வலி நிவாரணி மருந்துகள் ஓ.டி.சி வகையில் வழங்கப்பட்டால், இளைஞர்கள் இன்னும் கூடுதலாக போதைப் பழக்கத்திற்கு அடிமையாக நேரிடும் எனவும் மருந்தக உரிமையாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.