ஆப்பிளின் ஒப்பந்த சீன விற்பனை நிறுவனங்கள் இந்தியாவில் இருந்து இயங்க மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கொரோனா தொற்றின் அவசரகால நிலையில் இருந்து வெளிவரும் விதமாக பல்வேறு உலகளாவிய உற்பத்தி நிறுவனங்கள், தங்களுடைய தொழில்நுட்ப வேலையை மறுசுழற்சி செய்யும் விதமாக பல்வேறு முயற்சிகளை எடுத்துவருகின்றன. அந்தவகையில் பெரிய தொழில்நுட்ப நிறுவனமான ஆப்பிள், தங்களுடைய ஒப்பந்த சீன விற்பனை நிறுவனங்களை இந்தியாவிற்குள் இருந்து இயங்க அனுமதி கேட்டுள்ளதாகவும், அதற்கு இந்தியா அனுமதியளித்துள்ளதாகவும் தகவல் கசிந்துள்ளது.
முன்னதாக பல்வேறு காரணங்களுக்காக சீன நிறுவனங்களை இந்தியாவிற்குள் அனுமதிப்பதில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில், ஆப்பிளின் விற்பனையாளர்களான 12-15 சீன நிறுவனங்களை தற்போது அனுமதிக்க முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. இருப்பினும் மற்ற சீன நிறுவனங்களின் அனுமதியை மறுப்பதற்கான அதே கட்டுப்பாடுகள் தொடரும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
டைம்ஸ் ஆஃப் இந்தியா வெளியிட்டிருக்கும் தகவலின் படி, ஆப்பிள் நிறுவனம் தன் நாட்டிலிருந்து அதன் உற்பத்தியை அதிகரிக்கும் முயற்சியில், அதன் உற்பத்தி சுற்றுச்சூழல் அமைப்பை இந்தியாவிற்குள் அமைத்து, இந்தியாவிலிருந்தும் இயங்குவதற்கான அனுமதியை நாடியுள்ளது. ஏற்கனவே பல சென்சிடிவ் பிரச்சனை காரணமாக, சீன நிறுவனங்களின் புதிய முதலீடுகளைப் அனுமதிப்பதில் இந்திய அரசாங்கம் கடுமையான பாரவையை வைத்திருந்தாலும், தற்போது ஆப்பிளின் சீன விற்பனையாளர்களுக்கு விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளதாக வட்டாரங்கள் தெரிவிப்பதாக தகவல் வெளியிடபட்டுள்ளது.
ஆப்பிள் நிறுவனத்திற்கு உதிரிபாகங்களை வழங்கும் இந்த சீன நிறுவனங்களில் பெரும்பான்மையானவை சீனக் கட்டுப்பாட்டில் இருப்பது தெரிந்தும் அனுமதிப்பது குறித்து கவலைகள் இருந்தாலும். அரசாங்கம் அதன் முழு பங்குகளையும் ஒரு ஸ்பெசல் கேஸ் மூலம் நடத்த அனுமதித்துள்ளதாக தெரிகிறது. இதன் மூலம் மற்ற நேரடி சீன நிறுவனங்களின் நுழைவு நிகழுமா என்ற அச்சப்பாடு எழுப்பப்பட்ட நிலையில், சீன நிறுவனங்களுக்கு எதிரான முந்தைய அதே கடுமையான கட்டுப்பாடு தொடரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக இந்திய அரசாங்கமானது, சீன நிறுவனங்களை அனுமதிக்கும் தேவையை குறைத்து, உதிரிபாகங்களை உள்நாட்டிலேயே உற்பத்தி செய்ய வேண்டும் என்ற பல்வேறு நடவடிக்கைகளில் இறங்கியது. இதனை சாத்தியப்படுத்த முடியுமா என பல முன்னணி இந்திய நிறுவனங்கள் மற்றும் கூட்டு நிறுவனங்களை அணுகி பல மாதங்களாக காத்திருப்பிலும் இருந்து வந்தது இந்திய அரசாங்கம். ஆனால் இந்திய நிறுவனங்களால் அரசாங்கம் விரும்பிய முடிவுகளைத் தர முடியாமல் போனதால் தான், ஆப்பிள் நிறுவனத்தின் சீன விற்பனையாளர்கள் இப்போது உள்ளே அனுமதிக்கப்படுகிறார்கள் என்று கூறப்படுகிறது.
முக்கியமாக ஆப்பிளின் விற்பனையாளர்களான 12-15 சீன நிறுவனங்களும், அதன் உள்நாட்டு பொருட்கள் கிடைக்காததின் காரணமாகவே உற்பத்தி சூழலை பெருக்க அனுமதி கோரியுள்ளதாகவும், அதற்காக முக்கியமான கூறுகளை வழங்க முன்வந்திருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மற்றும் இந்த நிறுவனங்கள் உருவாக்கும் கூறுகள் அனைத்தும் முழு ஆப்பிள் உற்பத்தி சங்கிலிக்கும் முக்கியமானவையானதாகும். முன்னதாக ஆப்பிளின் ஒப்பந்த உற்பத்தியாளர்களான ஃபாக்ஸ்கான், விஸ்ட்ரான் மற்றும் பெகாட்ரான் ஆகிய மூன்று நிறுவனங்கள் இந்தியாவிலிருந்து சில லேடஸ்ட் ஐபோன்களை உற்பத்தி செய்துவருவது குறிப்பிடத்தக்கது.