மக்கள் தொகை கணக்கெடுப்பு முகநூல்
இந்தியா

மக்கள் தொகை கணக்கெடுப்பு: தயாரிப்புகளை தொடங்கிவிட்டதா மத்திய அரசு?

PT WEB

மக்கள் தொகை கணக்கெடுப்பிற்கான தயாரிப்புகளை மத்திய அரசு தொடங்கியிருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. அதே நேரம் இதில் சாதி விவரங்களை கேட்பது குறித்து முடிவு செய்யப்படவில்லை என அரசியல் வட்டாரங்களை மேற்கோள் காட்டி பிடிஐ செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் மக்கள் தொகை கணக்கெடுப்பு 1881ஆம் ஆண்டு முதல் பத்தாண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்பட்டு வருகிறது. ஆனால், 2021ஆம் ஆண்டுக்கான மக்கள் தொகை கணக்கெடுப்பு 2020ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் செப்டம்பர் மாதம் வரை நடைபெறவிருந்தது. ஆனால் கொரோனா பாதிப்பினால் தொடங்கப்படவில்லை.

தற்போது மக்கள் தொகை கணக்கெடுப்பை மேற்கொள்ள 12ஆயிரம் கோடி ரூபாய் செலவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அண்மையில் நிறைவேற்றப்பட்ட மகளிர் இடஒதுக்கீட்டு மசோதாவை அமல்படுத்துவதற்கும் மக்கள் தொகை கணக்கெடுப்பு அவசியம். சட்டம் இயற்றப்பட்ட பின்னர் எடுக்கப்படும் முதல் மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் மகளிர் இடஒதுக்கீடு வழங்கப்படும் என்றே சட்டம் இயற்றப்பட்டுள்ளது.

புதிய தரவுகள் கிடைக்காத நிலையில் அனைத்து அரசு திட்டங்களும் 2011ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையிலேயே செயல்படுத்தப்படுகின்றன.