ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் நடைபெற உள்ள வீடுகள் கணக்கெடுப்பு பணியின்போது, ஒவ்வொரு வீட்டிலும் டாய்லெட், மொபைல் எண், டிவி உள்பட பல விவரங்களை கணக்கீட்டு அதிகாரிகள் கேட்டு தெரிய உள்ளனர்.
தேசிய மக்கள் தொகை பதிவேட்டை விரைவில் செயல்படுத்த மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது. அதற்கு முன்னதாக நாடு முழுவதும் ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் வீடுகள் கணக்கெடுப்பு பணி நடைபெற உள்ளது. இதற்கான பணிகளில் ஈடுபடும் அதிகாரிகள் பல்வேறு விவரங்களை மக்களிடம் கேட்டு தெரிய அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதன்படி, வீட்டில் டாய்லெட் இருக்கிறதா..? டிவி, சொந்த வண்டி உள்ளதா..? குடிக்கும் தண்ணீரை எங்கிருந்து பெறுகிறீர்கள் என 31 வகையான கேள்விகளை கேட்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இருப்பினும் மொபைல் எண் குறித்து தெரிந்து கொள்வது மக்கள் தொகை கணக்கெடுப்பு தகவல்களுக்காக மட்டுமே என்றும் இதில் வேறு எந்த நோக்கமும் இல்லை என மக்கள் தொகை கணக்கெடுப்பு ஆணையர் தெரிவித்துள்ளார்.
இதுதவிரவும் வேறு சில கேள்விகள் கேட்கப்பட உள்ளன. அதாவது, வீட்டில் தொலைபேசி இருக்கிறதா, செல்போன், ஸ்மார்ட்போன், சைக்கிள், ஸ்கூட்டர், மோட்டார் சைக்கிள், கார், ஜீப், வேன், லேப்டாப், கணினி உள்ளிட்ட விவரங்கள் குறித்தும் கணக்கெடுப்பு அதிகாரிகள் கேட்க உள்ளனர். வீட்டின் எண், என்ன மாதிரியான வீடுகளில் வாழ்கிறீர்கள். அதாவது வீட்டின் தளம் எதனால் ஆக்கப்பட்டிருக்கிறது..? வீட்டில் எத்தனை நபர்கள் வசிக்கின்றனர். வீட்டின் தலைவர் யார்..? அவர்களின் பாலினம் என்ன.? வீட்டின் எண் உள்ளிட்ட விவரங்களையும் அதிகாரிகள் கேட்டுத் தெரிய உள்ளனர்.
வீட்டுத் தலைவர் பட்டியலின வகுப்பை சேர்ந்தவரா? அல்லது பிற பிரிவை சேர்ந்தவரா..? வீட்டின் உரிமையாளர் யார்..? வீட்டில் எத்தனை அறைகள் உள்ளன உள்ளிட்ட விவரங்களையும் அதிகாரிகள் கேட்டுத் தெரிய உள்ளனர். வீட்டுக் கணக்கெடுப்பு பணி நிறைவடைந்த பின்னர், தேசிய மக்கள்தொகை பதிவேட்டிற்கான பணிகள் தொடரும் எனத் தெரிகிறது.