Narendra Modi Twitter
இந்தியா

ரஜினிகாந்த் முதல் ஷாருக்கான் வரை... புதிய நாடாளுமன்ற திறப்புக்கு வாழ்த்து தெரிவித்த பிரபலங்கள்

புதிய நாடாளுமன்ற கட்டடத்தின் வீடியோவை 'எனது நாடாளுமன்றம்; எனது பெருமை' என்ற பெயரில் ட்விட்டரில் தங்களது கருத்துகளை பகிர வேண்டும் என பிரதமர் மோடி கேட்டுக் கொண்டிருந்தார்.

PT WEB

நாட்டின் புதிய நாடாளுமன்றம் ஜனநாயகத்தின் கோயிலாக திகழும் என்றும் இந்தியாவின் வளர்ச்சிப் பாதைக்கு வலுச்சேர்க்கும் என்றும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

புதிய நாடாளுமன்ற கட்டடத்தின் வீடியோவை 'எனது நாடாளுமன்றம்; எனது பெருமை' என்ற பெயரில் ட்விட்டரில் தங்களது கருத்துகளை பகிர வேண்டும் என பிரதமர் மோடி கேட்டுக் கொண்டிருந்தார். மேலும், திரைபிரபலங்கள் பகிர்ந்த ட்விட்டர் பதிவுகளையும் பிரதமர் மோடி தனது ட்விட்டர் கணக்கில் டேக் செய்துள்ளார். பாலிவுட் நடிகர் ஷாருக்கான் தனது ட்விட்டர் பதிவில் புதிய இந்தியாவுக்கு புதிய நாடாளுமன்றம் என குறிப்பட்டிருந்ததை டேக் செய்த பிரதமர் மோடி, அருமையான கருத்தை வெளிப்படுத்தியிருப்பதாக பாராட்டியுள்ளார்.

புதிய நாடாளுமன்றக் கட்டடம் திறக்கப்படுவது பற்றி இந்திய குடிமகனாகவும் நாடாளுமன்ற உறுப்பினராகவும் மிகுந்த மகிழ்ச்சி அடைவதாக இசையமைப்பாளர் இளையராஜா தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள அவர், பண்டைய தமிழர்களின் பெருமையும் நீதி மற்றும் நேர்மையின் அடையாளமுமான செங்கோல் மீண்டும் சரியான இடத்துக்கு வந்திருப்பதாக அவர் கூறியுள்ளார்.

அதே போல் புதிய நாடாளுமன்ற கட்டடத்தை காண்பது பெருமையாக இருப்பதாக பதிவு செய்த நடிகர் அக்ஷய் குமாரின் ட்வீட்டை டேக் செய்திருக்கும் பிரதமர் மிக அருமையான முறையில் கருத்தை வெளிப்படுத்தியிருப்பதாக அவரை பாராட்டியுள்ளார். மேலும் நமது ஜனநாயகத்திற்கு உண்மையான அடையாளமாக புதிய நாடாளுமன்ற கட்டடம் திகழும் என கூறியுள்ள பிரதமர் இது ஜனநாயகத்தின் கோயிலாகவும், கோடிக்கணக்கான மக்களின் எதிர்க்கால விருப்பங்களை நிறைவேற்றும் இடமாகவும் திகழும் என தெரிவித்துள்ளார்.

Ilayaraja

நாடாளுமன்றத்தில் செங்கோலை வைப்பதற்காக பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாக நடிகர் ரஜினிகாந்த் கூறியுள்ளார். இதுதொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், பிரதமர் மோடி தமிழர்களுக்கு பெருமை சேர்த்திருப்பதாக தெரிவித்துள்ளார். இந்திய நாட்டின் புதிய நாடாளுமன்றக் கட்டடத்தில் ஜொலிக்கப் போகும் தமிழர்களின் ஆட்சி அதிகாரத்தின் பாரம்பரிய அடையாளம் செங்கோல் என்றும் ரஜினிகாந்த் பதிவிட்டுள்ளார்.