இந்தியா

மாணவர்களுக்கு பயந்து மத்திய அமைச்சர் வீட்டின் முன்பு 144 தடை உத்தரவு

மாணவர்களுக்கு பயந்து மத்திய அமைச்சர் வீட்டின் முன்பு 144 தடை உத்தரவு

rajakannan

சிபிஎஸ்இ வினாத்தாள் வெளியான விவகாரத்தில் மாணவர்கள் போராட்டம் காரணமாக பிரகாஷ் ஜவடேகர் வீட்டின் முன்பு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

வாட்ஸ் அப்பில் வினாத்தாள் வெளியானதை அடுத்து 12ம் வகுப்பு பொருளாதார தேர்வு மற்றும் 10ம் வகுப்பு கணித தேர்வு மீண்டும் நடைபெறும் என்று சிபிஎஸ்இ கல்வி வாரியம் அறிவித்தது. தேர்வு நடைபெறும் நாள் ஒருவாரத்திற்குள் அறிவிக்கப்படும் என தெரிவித்துள்ளது. மறுதேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது மாணவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மறுதேர்வு அறிவிக்கப்பட்டுள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லி ஜந்தர் மந்திரில் மாணவர்கள் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். எல்லா பாடங்களுக்கும் மறுதேர்வு நடத்தப்பட வேண்டும் அல்லது எதற்கும் மறுதேர்வு நடத்தக் கூடாது என்று போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் வலியுறுத்தினர். தங்களுக்கு நீதி வேண்டும் என அவர்கள் முழக்கங்களை எழுப்பினர். 

இதனையடுத்து, இன்று டெல்லியில் உள்ள சிபிஎஸ்இ அலுவலகம் முன்பாகவும் மாணவர்கள் போராட்டம் நடத்தினர். மாணவர்கள் போராட்டம் காரணமாக மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் வீட்டின் முன்பாக 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. வினாத்தாள் வெளியான விவகாரம் தொடர்பாக டெல்லி போலீசார் 30-க்கும் மேற்பட்டோரிடம் இதுவரை விசாரணை மேற்கொண்டுள்ளனர்.