வினாத்தாள் வெளியான விவகாரத்தில் எல்லா பாடங்களுக்கும் மறுதேர்வு வைக்கக்கோரி சிபிஎஸ்இ மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
வாட்ஸ் அப்பில் வினாத்தாள் வெளியானதை அடுத்து 12ம் வகுப்பு பொருளாதார தேர்வு மற்றும் 10ம் வகுப்பு கணித தேர்வு மீண்டும் நடைபெறும் என்று சிபிஎஸ்இ கல்வி வாரியம் நேற்று அறிவித்தது. தேர்வு நடைபெறும் நாள் ஒருவாரத்திற்குள் அறிவிக்கப்படும் என தெரிவித்துள்ளது. மறுதேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது மாணவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், மறுதேர்வு அறிவிக்கப்பட்டுள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லி ஜந்தர் மந்திரில் மாணவர்கள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர். எல்லா பாடங்களுக்கும் மறுதேர்வு நடத்தப்பட வேண்டும் அல்லது எதற்கும் மறுதேர்வு நடத்தக் கூடாது என்று போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் வலியுறுத்தினர். தங்களுக்கு நீதி வேண்டும் என அவர்கள் முழக்கங்களை எழுப்பினர். இரண்டு அல்லது மூன்று வினாத்தாள்கள் தேர்வுக்கு 30 நிமிடங்களுக்கு முன்பாக வாட்ஸ் ஆப்பில் வெளியாகியுள்ளதாக மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் நேற்று கூறியிருந்தார். ஆனால் மாணவர்கள் எல்லா வினாத்தாள்களும் வெளியாகி இருக்க வாய்ப்புள்ளதாக குற்றம்சாட்டினர்.
பிரகாஷ் ஜவடேகர் மற்றும் சிபிஎஸ்இ அமைப்பின் தலைவர் அனிதா கர்வால் ஆகியோர் தங்களது பொறுப்புகளில் இருந்து நீக்கப்படுவதோடு அவர்கள் மீது உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. இந்த விவகாரத்தில் போலீசார் தங்களது விசாரணையை தொடங்கியுள்ளனர். அதிகாரிகள் உட்பட 25 பேரிடம் டெல்லி போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.