ஜூலை மாதம் நடத்தப்பட இருந்த சிபிஎஸ்இ பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் பதிலளித்துள்ளது.
கொரோனா வைரஸ் பாதிப்பு எதிரொலியால் நடப்பு ஆண்டுக்கான சிபிஎஸ்இ 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் சில நடத்தப்படாமல் இருந்தன. இந்த தேர்வுகளை ஜூலை 1ஆம் தேதி முதல் 15ஆம் தேதி வரை நடத்த சிபிஎஸ்இ நிர்வாகம் திட்டமிட்டிருந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவர்களின் பெற்றோர் தரப்பிலிருந்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு விசாரணையின் போது இன்று ஆஜராகி பதிலளித்த மத்திய அரசு தரப்பு, சிபிஎஸ்இ பொதுத்தேர்வுகள் அனைத்தும் நடத்தப்படாது என்றும், அவை ரத்து செய்யப்படுவதாகவும் தெரிவித்தது. தமிழ்நாடு, மகாராஷ்டிரா, டெல்லி, ஒடிசா உள்ளிட்ட மாநிலங்களிடம் கேட்கப்பட்ட கருத்துகளின் அடிப்படையில் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டிருப்பதாகவும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.