இந்தியா

நீட் கருணை மதிப்பெண் விவகாரம்: சிபிஎஸ்இ உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு

நீட் கருணை மதிப்பெண் விவகாரம்: சிபிஎஸ்இ உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு

Rasus

தமிழில் நீட் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு 196 கருணை மதிப்பெண்கள் வழங்க உத்தரவிட்ட தீர்ப்புக்கு எதிராக சிபிஎஸ்இ உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது.

நீட் தேர்வு தமிழ் வினாத்தாளில் 49 வினாக்கள் தவறாக இருந்ததால், கருணை மதிப்பெண் வழங்கக்கோரி உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடரப்பட்டது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர் டி.கே.ரங்கராஜன், இந்த பொதுநல மனுவினை தாக்கல் செய்திருந்தார்.

அதில், மே 6ஆம் தேதி நடத்தப்பட்ட நீட் தேர்வில் தமிழில் மொழிமாற்றம் செய்த வினாத்தாளில் 49 வினாக்கள் தவறாக கேட்கப்பட்டிருந்தது என்றும், இதனால் தமிழ் மொழியில் தேர்வெழுதிய மாணவர்களுக்கு தலா 4 மதிப்பெண்கள் வீதம் 196 மதிப்பெண்கள் கூடுதலாக வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தார். மேலும் +2 தேர்வு மதிப்பெண் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை நடத்த அனுமதி அளித்து உத்தரவிட வேண்டும் என்று மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

இந்த மனு மீது தீர்ப்பளித்த உயர்நீதிமன்ற மதுரை கிளை, தமிழில் நீட் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு கருணை மதிப்பெண்களாக 196 மதிப்பெண்கள் வழங்குமாறு சிபிஎஸ்இ-க்கு உத்தரவிட்டது. மேலும் 2 வாரத்திற்குள் புதிய தரவரிசைப் பட்டியலை வெளியிடவும் ஜூலை 10-ம் தேதி உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் தமிழில் நீட் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு 196 கருணை மதிப்பெண்கள் வழங்க உத்தரவிட்ட உயர்நீதிமன்ற மதுரை கிளையின் தீர்ப்புக்கு எதிராக சிபிஎஸ்இ உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது.