இந்தியா

சாரதா நிதி நிறுவன விவகாரம்: கொல்கத்தா காவல் ஆணையரிடம் இன்று விசாரணை

சாரதா நிதி நிறுவன விவகாரம்: கொல்கத்தா காவல் ஆணையரிடம் இன்று விசாரணை

webteam

சாரதா நிதி நிறுவன மோசடி தொடர்பாக கொல்கத்தா காவல் ஆணையர் ராஜீவ் குமாரிடம் சிபிஐ அதிகாரிகள் இன்று விசாரணை நடத்துகின்றனர்.

சாரதா நிதி நிறுவன மோசடி வழக்கில் கொல்கத்தா காவல் ஆணையர் ராஜீவ் குமாரை விசாரிக்க, அவரது வீட்டிற்கு சிபிஐ அதிகாரிகள் சென்றனர். அவர்களை கொல்கத்தா போலீசார் தடுத்து நிறுத்தி காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரித்தனர். பின்னர் சிபிஐ அதிகாரிகள் விடுவிக்கப்பட்டனர். இந்த விவகாரத்தில் மத்திய அரசின் நடவடிக்கையைக் கண்டித்து, மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி 3 நாட்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

இதனையடுத்து சாரதா சிட்பண்ட் முறைகேடு வழக்கில் கொல்கத்தா காவல் ஆணையரை விசாரிக்க அனுமதிகோரி உச்சநீதிமன்றத்தில் சிபிஐ மனு தாக்கல் செய்தது. சிபிஐ மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம் மேகாலயா மாநிலத்தின் ஷில்லாங்கில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் கொல்கத்தா காவல் ஆணையர் ராஜீவ் குமார் ஆஜராக வேண்டுமென உத்தரவிட்டது.

அதன்படி, விசாரணைக்காக மேகாலயா மாநிலம் சில்லாங்கில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் ஆஜராகும்படி ஏற்கனவே அவருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளிக்கும்படி உச்ச நீதிமன்றம் அறிவுறுத்திள்ள நிலையில், கொல்கத்தா காவல் ஆணையர் ராஜீவ் குமாரிடம் இன்று விசாரணை நடைபெற உள்ளது. இதற்காக டெல்லியில் இருந்து சிபிஐ அதிகாரிகள் சில்லாங் சென்றுள்ளனர்.