சாரதா நிதி நிறுவன வழக்கில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்.பி குனால் கோஷுக்கு சிபிஐ சம்மன் அனுப்பியுள்ளது.
சாரதா நிதி நிறுவன மோசடி வழக்கில் கொல்கத்தா காவல் ஆணையர் ராஜீவ் குமாரை விசாரிக்க, கடந்த ஞாயிற்றுக்கிழை அவரது வீட்டிற்கு சிபிஐ அதிகாரிகள் சென்றனர். அவர்களை கொல்கத்தா காவல்துறையினர் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. அத்துடன் சிபிஐ அதிகாரிகளை காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்ற காவலர்கள், பின்னர் விடுவித்தனர்.
இந்த விவகாரம் இந்திய அளவில் அரசியல் கவனத்தை ஈர்த்தது. இதையடுத்து சிபிஐ அதிகாரிகளின் நடவடிக்கைக்கு எதிராகவும், தேசிய கூட்டாட்சித் தத்துவம் மற்றும் ஜனநாயகத்தை காப்பதாகவும் கூறி மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பேனர்ஜி தர்ணாவில் ஈடுபட்டார். அவருக்கு பல மாநில அரசியல் தலைவர்கள் ஆதரவு தெரிவித்தனர். இதனையடுத்து சாரதா சிட்பண்ட் முறைகேடு வழக்கில் கொல்கத்தா காவல் ஆணையரை விசாரிக்க அனுமதிகோரி உச்சநீதிமன்றத்தில் சிபிஐ மனு தாக்கல் செய்தது.
சிபிஐ மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், மேகாலயா மாநிலத்தின் ஷில்லாங்கில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் கொல்கத்தா காவல் ஆணையர் ராஜீவ் குமார் ஆஜராக வேண்டுமென உத்தரவிட்டது. இதைத்தொடர்ந்து காவல் ஆணையர் ராஜூவ் குமாரிடம் வரும் ஞாயிற்றுக்கிழமை சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்துவார்கள் எனத் தகவல் வெளியாகியது.
இந்நிலையில், சாரதா நிதி நிறுவன வழக்கில், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மாநிலங்களவை உறுப்பினர் குனால் கோஷூக்கு சிபிஐ சம்மன் அனுப்பியுள்ளது. அத்துடன் வரும் 10ஆம் தேதி ஷில்லாங்கில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் ஆஜராகவும் குனாலுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதுதொடர்பான வழக்கு விசாரணை உச்சநீதிமன்றத்தில் வரும் 20ஆம் தேதி விசாரணைக்கு வரவுள்ளது.