நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்புவதற்கு பணம் பெற்றதாக எழுந்த குற்றச்சாட்டில் மேற்கு வங்க மாநில திரிணாமுல் காங்கிரஸ் கட்சி எம்.பி. மஹுவா மொய்த்ரா விசாரணையை எதிர்கொண்டார். அதன் முடிவில் அவரது எம்.பி. பதவியும் பறிக்கப்பட்டது. பின்னர், மக்களவை உறுப்பினர் பதவியில் இருந்து, தாம் நீக்கப்பட்டதற்கு எதிராக மஹுவா மொய்த்ரா உச்சநீதிமன்றத்தில் மனு அளித்தார். இதுதொடர்பான வழக்கு, விசாரணையில் உள்ளது.
எனினும் இந்த விவகாரத்தில், குற்றச்சாட்டு வைக்கப்பட்டிருந்த நாளில் இருந்தே மஹுவா மொய்த்ரா அதை தொடர்ந்து மறுத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
அதேநேரத்தில், மஹுவாவின் பதவி நீக்கத்திற்கு அதுவரை வாய் திறக்காது மவுனம் காத்து வந்த மேற்குவங்க முதல்வரும் திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி, அப்போது கண்டனம் தெரிவித்தார். ”மஹுவா மொய்த்ரா வெளியேற்றப்பட்ட விதத்தை நாங்கள் கண்டிக்கிறோம். கட்சி அவருடன் துணை நிற்கிறது. மொய்த்ரா ஒரு பெரிய பலத்துடன் மீண்டும் நாடாளுமன்றத்திற்குத் திரும்புவார்” எனச் சொல்லி ஆதரவுக்கரம் நீட்டினார்.
இதுகுறித்து அப்போது கருத்து தெரிவித்த மஹுவா மொய்த்ரா, “இந்த மக்களவையில் இருந்து என்னை வெளியேற்றினாலும், அடுத்த மக்களவைக்கு நான் பெரிய வெற்றியுடன் மீண்டும் வருவேன். அதேநேரம் என்னை நீக்கியது என்பது, முன்கூட்டியே நிர்ணயிக்கப்பட்ட முடிவு. இதில் எனக்கு எந்த ஆச்சரியமும் இல்லை. மேலும் எனக்கு இதனால் எந்த விளைவும் ஏற்படாது. ஆனால் இந்தியாவைப் பொறுத்தவரை இது நாடாளுமன்ற ஜனநாயகத்தின் மரணம்” எனத் தெரிவித்திருந்தார்.
இதற்கிடையே திரிணாமுல் காங்கிரஸ் கட்சி, வரும் மக்களவை தேர்தலில் மீண்டும் மொய்த்ராவுக்கு சீட் வழங்கியுள்ளது. அவர், மேற்கு வங்க மாநிலம் கிருஷ்ணா நகர் தொகுதியில் போட்டியிடுகிறார். 42 மக்களவைத் தொகுதிகள் அடங்கியுள்ள மேற்கு வங்க மாநிலத்தில் 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற இருக்கிறது. வரப்போகும் தேர்தலுக்காக தீவிரமாக பரப்புரையில் ஈடுபட்டு வருகிறார் மஹூவா மொய்த்ரா.
இந்த நிலையில், கொல்கத்தாவில் உள்ள மஹுவா மொய்த்ராவின் வீடு, கிருஷ்ணா நகர் அலுவலகம் மற்றும் அவருக்கு தொடர்புடைய இடங்களில் சி.பி.ஐ. இன்று சோதனை நடத்தி வருகிறது.
முன்னதாக, நாடாளுமன்றத்தில் அதானிக்கு எதிராக கேள்வியெழுப்ப லஞ்சம் பெற்ற வழக்கில் அனைத்து அம்சங்களையும் விசாரிக்க சிபிஐக்கு ஊழல் தடுப்பு குறைதீர்ப்பு மன்றமான லோக்பால் ஆணையம் கடந்த மார்ச் 15ஆம் தேதி உத்தரவிட்டது. மேலும், குற்றச்சாட்டுகளை விசாரித்து ஆறு மாதங்களுக்குள் அறிக்கை சமர்ப்பிக்குமாறு சிபிஐக்கு ஆணையம் தெரிவித்திருந்தது. அதன்பேரில் அவர் மீது கடந்த மார்ச் 21ஆம் தேதி வழக்குப்பதிவு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.