ஐசிஐசிஐ வங்கியின் முன்னாள் தலைவர் சந்தா கோச்சார் வழக்கை விசாரித்து வந்த சிபிஐ அதிகாரி அதிரடியாக மாற்றப்பட்டுள்ளார்.
வீடியோகான் நிறுவனத்துக்கு கடந்த 2012ம் ஆண்டில் ஐசிஐசிஐ வங்கி சார்பில் ரூ3250 கோடி கடன் வழங்கப்பட்டது. இந்தக் கடன் வழங்கப்பட்ட போது வங்கி தலைவராக சந்தா கோச்சார் இருந்தார். இவர், தன் அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தி முறைகேடாக வீடியோகான் நிறுவனத்துக்கு கடன் அளித்துள்ளதாக புகார் எழுந்தது.
அதாவது, சந்தா கோச்சாரின் கணவர் தீபக் கோச்சார் நடத்தி வரும் நிறுவனத்தில் வீடியோகான் குழுமத்தின் வேணுகோபால் தூத் கோடிக்கணக்கில் முதலீடு செய்துள்ளார். எனவே கணவரின் நிறுவனம் பயன்பெறும் வகையில் இந்தக் கடன் அளிக்கப்பட்டதாக வங்கியின் பங்குதாரர்கள் தரப்பில் குற்றச்சாட்டுகள் முன் வைக்கப்பட்டன.
இந்த விவகாரம் தொடர்பாக விசாரிக்க ஐசிஐசிஐ வங்கி நிர்வாகம் தரப்பில் குழு அமைக்கப்பட்டது. அதுவரை சந்தா கோச்சார் கட்டாய விடுப்பில் அனுப்பி வைக்கப்பட்டார். இந்த விவகாரம் தொடர்பாக சிபிஐயும் விசாரணை மேற்கொண்டு வந்தது.
இந்நிலையில், முறைகேடாக வங்கி கடன் வழங்கிய விவகாரத்தில் வேணுகோபால் தூத்தின் வீடியோகான் மற்றும் தீபக் கோச்சாரின் நிறுவனங்கள் மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்துள்ளது. இதற்கான எப்.ஐ.ஆரில் சந்தா கோச்சாரின் பெயர் இடம் பெற்றுள்ளது. சி.பி.ஐ.யின் இந்த நடவடிக்கைக்கு, அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வரும், மத்திய அமைச்சர், அருண் ஜெட்லி அதிருப்தி தெரிவித்தார்.
இந்நிலையில், சந்தா கோச்சார் தொடர்பான வழக்கை விசாரித்து எப்.ஐ.ஆர் பதிந்த சி.பி.ஐ. அதிகாரி சுதன்ஷு தார் மிஸ்ரா, அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவர், ராஞ்சியில் உள்ள, சி.பி.ஐ.யின் பொருளாதார குற்றப்பிரிவுக்கு மாற்றப் பட்டுள்ளதாகத் தெரிகிறது.