இந்தியா

நில ஒதுக்கீடு ஊழல்: முன்னாள் முதல்வர் ஹூடா மீது சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல்

நில ஒதுக்கீடு ஊழல்: முன்னாள் முதல்வர் ஹூடா மீது சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல்

rajakannan

ஹரியானா மாநிலத்தில் உள்ள பஞ்ச்குலா நில ஒதுக்கீடு ஊழல் தொடர்பாக முன்னாள் முதலமைச்சர் பூபிந்தர் சிங் ஹூடா, காங்கிரஸ் மூத்த தலைவர் மோதிலால் வோரா ஆகியோர் மீது சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.

அசோசியேட் ஜர்னல்ஸ் நிறுவனத்தை முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு தொடங்கினார். அந்த நிறுவனத்தை சோனியா காந்தி குடும்பத்தினர் மற்றும் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் நிர்வகித்து வருகின்றனர். பூபிந்தர் சிங் ஹுடா தலைமையிலான காங்கிரஸ் அரசு கடந்த 2005 ஆம் ஆண்டு, ஹரியானா மாநிலம் பஞ்ச்குலா என்ற இடத்தில் 3360 சதுர மீட்டர் நிலத்தை, அசோசியேட் ஜர்னல்ஸ் நிறுவனத்துக்கு குத்தகைக்கு விட்டது. விதிகளை மீறி குத்தகை விடப்பட்டதாகவும், சுமார் 1500 கோடி ரூபாய் வரை இதில் ஊழல் நடைபெற்றுள்ளதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன.

கடந்த 2014-ல் மனோகர் லால் கத்தார் தலைமையிலான பாஜக அரசு ஆட்சிப் பொறுப்பேற்றும் நில ஒதுக்கீடு விவகாரம் குறித்து மாநில ஊழல் கண்காணிப்புத் துறை விசாரணை நடத்தியது. அதன்பேரில் பூபிந்தர் சிங் ஹுடா மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. பின்னர், இந்த வழக்கு சிபிஐ வசம் சென்றது. ஹூடாவின் வீடு உட்பட, 20 இடங்களில், சி.பி.ஐ., அதிகாரிகள் அதிரடி சோதனையும் நடத்தினர். பூபிந்தர் சிங் ஹூடா மீது சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்து, விசாரணையும் நடத்தி வந்தது.

இந்நிலையில், நில மோசடி வழக்கில் சிபிஐ சிறப்பு நீதிபதி ஜக்தீப் சிங்கிடம் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. பூபிந்த சிங் ஹூடா, மோதிலால் வோரா உள்ளிட்டோர் மீதும், அசோசியேட்டட் ஜர்னல்ஸ் பத்திரிகை நிறுவத்தின் மீதும் சி.பி.ஐ. நீதிமன்றத்தில் இன்று குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 

அதில், “1982 ஆம் ஆண்டு பஞ்ச்குலா என்னும் இடத்தில் அசோசியேட் ஜர்னல்ஸ் நிறுவனத்திற்கு நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனால், 1992 ஆம் ஆண்டு வரை அங்கு எவ்வித கட்டுமான பணிகளும் நடைபெறவில்லை. பின்னர், ஹூடா அந்த நிலத்தை திரும்ப பெற்றுக் கொண்டார். அதே நிலத்தை அசோசியேட் ஜர்னல்ஸ் நிறுவனத்திற்கு 2005ல் பழைய விலைக்கே ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதில் விதி மீறல்கள் நடைபெற்றுள்ளது” என குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

முன்னதாக, இந்த வழக்கில் முன்னாள் முதல்வரான ஹூடா மீது நில மோசடி வழக்கில் நடவடிக்கை எடுக்க ஹரியானா ஆளுநர் சத்யதேவ் நாராயன் ஆர்யா ஒப்புதல் அளித்திருந்தார்.