கேரள கன்னியாஸ்திரி கொலை வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட பாதிரியார் தாமஸ்க்கும், உடந்தையாக இருந்த கன்னியாஸ்திரிக்கும் ஆயுள் தண்டனை அறிவித்தது சிபிஐ சிறப்பு நீதிமன்றம்.
கேரளாவின் கோட்டயம் நகரில் 19 வயதான கன்னியாஸ்திரி அபயா 27 மார்ச் 1992 அன்று கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டார். 28 ஆண்டுகளாக நடைபெற்று வந்த இவ்வழக்கில் நேற்று தீர்ப்பளித்த சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி, பாதிரியார் தாமஸ் கோட்டூர் மற்றும் கன்னியாஸ்திரி செபி ஆகியோர் குற்றவாளிகள் என தீர்ப்பிளித்து, தண்டனை விபரங்கள் நாளை அறிவிக்கப்படும் என கூறி உத்தரவிட்டார்.
இந்நிலையில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அதன்படி, கேரள கன்னியாஸ்திரி கொலை வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட பாதிரியார் தாமஸ்க்கும், உடந்தையாக இருந்த கன்னியாஸ்திரிக்கும் ஆயுள் தண்டனை அறிவித்தது சிபிஐ சிறப்பு நீதிமன்றம்
28 ஆண்டுகால வழக்கு - என்ன நடந்தது?
கேரளாவின் கோட்டயம் நகரில் 19 வயதான கன்னியாஸ்திரி அபயா 27 மார்ச் 1992 அன்று கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டார். முதலில் அபயா தற்கொலை செய்து கொண்டதாக போலீசார் வழக்கை முடித்தனர். ஆனால், அபயா மரணத்தில் சந்தேகம் இருப்பதாக மனித உரிமை ஆர்வலர் ஜோமோகன் என்பவர் சிபிஐ விசாரணைக்கு மாற்றக்கோரி கேரள உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றியபோது, விசாரணையில் அபயா கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து, அபயா இறப்பை கொலை வழக்காக பதிவுசெய்து கொலையாளிகளை கண்டுபிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது.தனிப்படையினர் நடத்திய விசாரணையில், பாதிரியார்களான தாமஸ் கோட்டூர், ஜோஸ் புத்ருஐக்கயில் மற்றும் கன்னியாஸ்திரி செபி ஆகிய மூவர்தான் கிணற்றில் அபயாவை தள்ளி, கொலை செய்தது அம்பலமானது.
பாதிரியார் தாமஸ் கோட்டூருக்கும் கன்னியாஸ்திரி செபிக்கும் இடையே திருமணத்தை மீறிய உறவு இருந்துள்ளது. இதை ஒருமுறை கன்னியாஸ்திரி அபயா நேரில் பார்த்துவிட்டார். தங்களின் உறவை அபயா வெளியே கூறிவிடுவார் என்று பயந்து போன பாதிரியார்கள், கன்னியாஸ்திரி அபாயவை பள்ளி வளாகத்தில் உள்ள கிணற்றில் தள்ளி கொலை செய்துள்ளனர்.இதையடுத்து, 2008 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் இவர்கள் மூவரும் கைது செய்யப்பட்டனர். இதில் ஜோஸ் புத்ருஐக்கயில் தன்னை இந்த வழக்கிலிருந்து விடுவிக்கக் கோரி கேரள உயர்நீதிமன்றத்தை அணுகிய நிலையில், அவர் மட்டும் போதிய ஆதாரங்கள் இல்லாததால் விடுவிக்கப்பட்டார். மற்ற இருவர் மீதும் வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது. கிட்டத்தட்ட 28 ஆண்டுகளாக இந்த வழக்கில் 177 சாட்சியங்கள் விசாரிக்கப்பட்டன.
இந்த வழக்கில் ஆழப்புலா அரசு மருத்துவமனையின் மகப்பேறு பிரிவு தலைவர் லலிதாம்பா அளித்த சாட்சியும் முக்கியமானதாக அமைந்தது. நீதிமன்றத்தில் லலிதாம்பா அளித்த சாட்சியத்தில், ''செபியை கைது செய்ய போலீஸார் 2008 ஆம் ஆண்டு நவம்பர் 19 ஆம் தேதி கன்னித்தன்மை பரிசோதனைக்காக என்னிடத்தில் அழைத்து வந்தனர். அப்போது, தான் கன்னித்தன்மையுடன் இருப்பது போல காட்டிக் கொள்வதற்காக செபி அறுவை சிகிக்சை செய்திருந்தை கண்டுபிடித்தேன்'' என்றும் கூறினார். இதையடுத்து, வழக்கு விசாரணை தீவிரமானது.
இப்படி பல்வேறு திருப்பங்களுடன் நடைபெற்ற இந்த வழக்கில் பல சாட்சியங்கள் பிறழ் சாட்சியங்களாக மாறினர். சிலர் தங்கள் சாட்சியத்தில் உறுதியாக நின்றனர். 28 ஆண்டுகளாக நடைபெற்று வந்த இவ்வழக்கு தற்போது முடிவுக்கு வந்துள்ளது.