இந்தியா

சட்டவிரோத பணபரிமாற்றம் செய்த 47 பேர் கைது: சிபிஐ தகவல்

சட்டவிரோத பணபரிமாற்றம் செய்த 47 பேர் கைது: சிபிஐ தகவல்

webteam

பணமதிப்பு நீக்க நடவடிக்கைக்குப் பிறகு செல்லாத நோட்டுக்களை சட்டவிரோதமாக மாற்ற முயன்ற 47 பேர் இதுவரையில் கைது செய்யப்பட்டுள்ளதாக சிபிஐ தெரிவித்துள்ளது.
பணமதிப்பு நீக்க நடவடிக்கைக்குப் பிறகு, செல்லாது என அறிவிக்கப்பட்ட 500 மற்றும் ஆயிரம் ரூபாய் நோட்டுகளை சட்ட விரோதமாக மாற்ற முற்பட்டவர்கள், வங்கிகளில் செலுத்த முயன்றவர்களை உன்னிப்பாக கவனித்து நடவடிக்கை எடுத்து வருவதாக சிபிஐ கூறியுள்ளது. இந்த விவகாரத்தில் இதுவரை 77 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், மேலும் 7 வழக்குகள் ஆரம்பகட்ட விசாரணையில் இருப்பதாகவும் சிபிஐ வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
பணத்தை சட்ட விரோதமாக மாற்ற முயன்றது, மாற்றிக் கொடுக்க உதவியது தொடர்பாக இதுவரை பதிவு செய்யப்பட்டுள்ள வழக்குகளில் 307 நபர்களுக்கு தொடர்பு இருப்பதாவும், அவர்களில் 183 பேர் வங்கி உள்ளிட்ட அரசு பொதுப்பணித்துறை நிறுவனங்களில் பணியாற்றிய ஊழியர்கள் எனவும் சிபிஐ கூறியுள்ளது. இந்த வழக்குகளில் இதுவரை 47 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் எனவும் அது தெரிவித்துள்ளது.
நாட்டின் பல்வேறு பகுதிகளில் தாங்கள் நடத்திய சோதனைகளில் பல போலி நிறுவனங்கள் கண்டுபிடிக்கப்பட்டிருப்பதாகவும், பணப்பரிமாற்றத்திற்காக பல வங்கிகளில் போலி ஆவணங்கள் அளித்து புதிய கணக்கு தொடங்கியதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் சிபிஐ தெரிவித்துள்ளது. 
சிபிஐ பதிவு செய்துள்ள 84 வழக்குகளில் தொடர்புடைய ஒட்டுமொத்த பணத்தின் மதிப்பு 396 கோடி ரூபாய் என கணக்கிடப்பட்டுள்ளது.