இந்தியா

இதுவல்லவா துணிச்சல்! திருடனுக்கே டஃப் கொடுத்த ராஜஸ்தான் பெண் வங்கி அதிகாரி! வைரல் வீடியோ

இதுவல்லவா துணிச்சல்! திருடனுக்கே டஃப் கொடுத்த ராஜஸ்தான் பெண் வங்கி அதிகாரி! வைரல் வீடியோ

ச. முத்துகிருஷ்ணன்

ராஜஸ்தானின் ஸ்ரீகங்காநகர் பகுதியில் உள்ள மீரா மார்க்கில் உள்ள வங்கி ஒன்றில் கத்தியைக் காட்டி மிரட்டி கொள்ளையடிக்க முயன்ற திருடனை அவ்வங்கியில் பணியாற்றும் பெண் அதிகாரி ஒருவர் துணிச்சலுடன் எதிர்த்து போராடிய வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவுகிறது.

சனிக்கிழமை அன்று அந்த வங்கிக்குள் நுழைந்த கொள்ளையன் அங்கு பணியில் இருந்த வங்கி ஊழியர்களை கத்தியைக் காட்டி மிரட்டியுள்ளான். ஒரு பையைக் காட்டி அந்தப் பை முழுவதும் பணத்தை நிரப்புமாறு வங்கி ஒருவரை மிரட்டியுள்ளான். வங்கி ஊழியர்கள் அனைவரும் அதிர்ச்சியில் உறைந்திருந்த வேளையில் அவ்வங்கியில் மேலாளராகப் பணியாற்றும் பூனம் குப்தா திருடனை துணிச்சலுடன் எதிர்த்து தாக்கத் துவங்கியுள்ளார்.

திருடனின் பாக்கெட்டில் இருந்து விழுந்த இரும்பு பொருளை எடுத்து திருடனுடன் சண்டையிடத் துவங்கினார் பூனம் குப்தா. இதையடுத்து மற்ற வங்கி ஊழியர்களும் திருடனை துணிச்சலுடன் தாக்கத் துவங்கியுள்ளனர். திருடனைப் பிடிக்க அனைவரும் முயற்சி செய்யும் காட்சிகளும், திருடன் தாக்குதலுக்கு அஞ்சி பின்வாங்கும் காட்சிகளும் சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மீரா சௌக் காவல் நிலையப் பொறுப்பாளர் ராம்விலாஸ் பிஷ்னோய் திருடனைக் கைது செய்தார். போலீசார் நடத்திய விசாரணையில் பட்டப்பகலில் வங்கியில் கொள்ளையடிக்க முயன்ற அந்த திருடன் 29 வயதேயான லாவிஷ் என்ற இளைஞன் என தெரிய வந்துள்ளது. கத்தியைக் காட்டி மிரட்டிய போதும் திருடனுக்கு எதிராக துணிச்சலுடன் போராடிய பூனம் குப்தாவுக்கு இணையதளத்தில் பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.