இந்தியா

பாகிஸ்தான் பெண் உளவாளியிடம் ராணுவ ரகசியங்களை வழங்கிய ராணுவ வீரர் கைது

பாகிஸ்தான் பெண் உளவாளியிடம் ராணுவ ரகசியங்களை வழங்கிய ராணுவ வீரர் கைது

ஜா. ஜாக்சன் சிங்

பாகிஸ்தான் பெண் உளவாளியிடம் இந்திய ராணுவ ரகசியங்களை வழங்கியதாக கூறி ராணுவ வீரர் ஒருவரை ராஜஸ்தான் போலீஸார் கைது செய்துள்ளனர்.

ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் உள்ள ராணுவத் தளத்தில் பணியாற்றி வந்தவர் பிரதீப் குமார் (24). இவருக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஃபேஸ்புக்கில் ஒரு பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. உண்மையிலேயே அந்தப் பெண், பாகிஸ்தான் உளவு நிறுவனமான ஐஎஸ்ஐ-இன் உளவாளி ஆவார். ஆனால், பிரதீப் குமாரிடம் தான் மத்தியப் பிரதேச மாநிலம் குவாலியரை சேர்ந்தவர் என்றும், தற்போது பெங்களூரில் ஐ.டி. நிறுவனத்தில் பணியாற்றி வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

பிரதீப் குமாரும் இதனை நம்பி அந்தப் பெண்ணுடன் பழகி வந்துள்ளார். இதனிடையே, ஒரு மாதத்துக்கு பிறகு பிரதீப் குமாரிடம் அந்தப் பெண் தனது காதலை கூறியுள்ளார். அதையும் நம்பிய பிரதீப் குமார், அவரது காதலை ஏற்றுக்கொள்வதாக கூறி ஃபேஸ்புக்கிலேயே காதலித்து வந்துள்ளார்.

இவர்களின் காதல் உரையாடல்களுக்கு இடையிடையே, பிரதீப் குமாரிடம் இந்திய ராணுவத்தின் ரகசியக் கோப்புகளை அந்தப் பெண் கேட்டிருக்கிறார். ஏன் என பிரதீப் குமார் கேட்டதற்கு, தனது தோழிகளிடம் அவற்றை காண்பிப்பதற்காக என அந்தப் பெண் தெரிவித்திருக்கிறார். பிரதீப் குமாரும் தனது ராணுவத் தளத்தில் இருந்த ராணுவ ரகசியம் அடங்கிய கோப்புகளை செல்போனில் புகைப்படம் எடுத்து அவற்றை வாட்ஸ் அப் மூலம் அனுப்பி வந்திருக்கிறார். இவ்வாறு 10-க்கும் மேற்பட்ட ராணுவ ரகசியங்களை அவர் வழங்கியிருப்பதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், ராஜஸ்தான் சைபர் கிரைம் போலீஸார் ஒரு முறை ஃபேஸ்புக் தொடர்பான ஒரு குற்றத்தை விசாரிக்கும்போது, பாகிஸ்தானில் இருந்து ஒரு சிக்னல் வந்ததை கண்டுபிடித்தனர்.

இதனைத்தொடர்ந்து, அந்த ஃபேஸ்புக் கணக்கை ஆராய்ந்ததில் அவர் பாகிஸ்தான் பெண் உளவாளி என்பதும், ராணுவ வீரர் பிரதீப் குமாரை ஏமாற்றி பல ராணுவ ரகசியங்களை அவர் பெற்று வருவதும் போலீஸாருக்கு தெரியவந்தது. இதையடுத்து, ராணுவ அதிகாரிகளிடம் தகவல் தெரிவித்த ராஜஸ்தான் போலீஸார், அவர்களின் அனுமதி பெற்ற பின்னர் பிரதீப்குமாரை நேற்று கைது செய்தனர். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருவதாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.