இந்தியா

"குடியிருப்பு பெயர்களில் இருந்து சாதி பெயர் நீக்கப்படும்" - மகாராஷ்டிர அரசு

"குடியிருப்பு பெயர்களில் இருந்து சாதி பெயர் நீக்கப்படும்" - மகாராஷ்டிர அரசு

EllusamyKarthik

மகாராஷ்டிர மாநிலத்தில் சாதிப் பெயர் கொண்ட குடியிருப்புகளின் பெயர்கள் படிப்படியாக மாற்றப்படும் என அம்மாநில சமூக நீதித்துறை அமைச்சர் தனஞ்சய் முண்டே தெரிவித்துள்ளார். இதற்கான ஒப்புதலை மாநில அமைச்சரவை வழங்கியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள குடியிருப்புகளுக்கு சாதிப்பெயர் உள்ளதாகவும் மகாராஷ்டிரா போன்ற வளரும் மாநிலங்களுக்கு இது பொருத்தமானது அல்ல என்றும் முதலமைச்சர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. சாதிப்பெயர்களுக்கு பதில் தேசிய தலைவர்கள் உள்ளிட்ட பொதுவான பெயர்கள் வைக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. தங்கள் அரசின் இத்திட்டம் மக்கள் மனதில் மாற்றம் கொண்டு வரும் என்று அமைச்சர் தனஞ்சய் முண்டே தெரிவித்துள்ளார்.

'சாதிப்பெயர்களை நீக்கும் முடிவுக்கு பாராட்டு'

மகாராஷ்டிர அரசின் முற்போக்கான முடிவு வரவேற்புக்குரியது என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். பல நூறு ஆண்டுகளாகப் பரவிப் புரையோடிப் போயிருக்கும் சாதிப் பாகுபாடுகளை, அதன் விளைவாக நேர்ந்த கொடுமைகளை, வன்மத்தை அகற்றிட தொடர்ச்சியான செயல்பாடுகள் தேவை என ஸ்டாலின் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். அந்த வகையில், மகாராஷ்டிர மாநிலத்தில் முதலமைச்சர் உத்தவ் தாக்கரே தலைமையிலான அரசு மேற்கொண்டுள்ள சாதிக் குடியிருப்புகளின் பெயர் மாற்ற முடிவினை பாராட்டி மகிழ்வதாக ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.