ஜார்க்கண்ட் - பணம் பறிமுதல் முகநூல்
இந்தியா

ஜார்க்கண்ட் | அமைச்சர் உதவியாளர் வீட்டில் கட்டுக்கட்டாக பணம் பறிமுதல் செய்த அமலாக்கத்துறை!

ஜார்க்கண்ட்டில் அமைச்சரின் தனிச்செயலாளரிடம் பணிபுரிபவரின் அறையிலிருந்து கட்டுக்கட்டாக பணத்தை அமலாக்கத்துறையினர் கைப்பற்றினர்.

கணபதி சுப்ரமணியம்

ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஊரக வளர்ச்சித்துறை தலைமைப் பொறியாளரான வீரேந்திர ராம் என்பவர், சட்டவிரோத பணபரிவர்த்தனை தொடர்பான வழக்கில் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் கைது செய்யப்பட்டார்.

அரசின் திட்டங்களை செயல்படுத்துவதில் அவர் முறைகேட்டில் ஈடுபட்டதாகவும், 100 கோடி ரூபாய் அளவுக்கு சொத்து சேர்த்ததாகவும் எழுந்த குற்றச்சாட்டில் அமலாக்கத்துறை நடவடிக்கை எடுத்தது. இந்த வழக்கில் ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சி உள்பட பல்வேறு பகுதிகளில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தினர்.

இதில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஆலம்கீரின் தனிச்செயலாளர் சஞ்சீவ் லால் என்பவரிடம் பணிபுரிபவரின் அறையில் நடத்தப்பட்ட சோதனையில் கட்டுக்கட்டாக பணம் கைப்பற்றப்பட்டது. இதில் ரொக்கம் மிகவும் அதிகமாக உள்ளதால், இயந்திரங்களைக் கொண்டு பணத்தை கணக்கிடும் பணி நடைபெற்று வருகிறது

30 கோடி ரூபாய் அளவுக்கு பணம் பறிமுதல் செய்யப்பட்டதாகக் கூறப்படும் நிலையில், அமலாக்கத்துறையினர் சோதனையை தீவிரப்படுத்தியுள்ளனர்.