இந்தியா

500 ரூபாய் நோட்டுகளை கூடுதலாக அச்சிட மத்திய அரசு முடிவு

500 ரூபாய் நோட்டுகளை கூடுதலாக அச்சிட மத்திய அரசு முடிவு

rajakannan

பணத்தட்டுப்பாட்டை தவிர்க்க கூடுதலாக 500 ரூபாய் நோட்டுகளை அச்சிட முடிவு செய்துள்ளதாக பொருளாதார விவகாரங்களுக்கான செயலாளர் சுபாஸ் சந்திர கார்க் கூறியுள்ளார்.

இதுகுறித்து டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய கார்க், “தட்டுப்பாடுகளை தவிர்க்கும் பொருட்டு கூடுதலாக பணத்தை புழக்கத்தில் விட முடிவு செய்துள்ளோம். குறிப்பாக, 500 ரூபாய் நோட்டுகளை ஒரு நாளைக்கு 500 கோடி நோட்டுகளை அச்சிட திட்டமிட்டுள்ளோம். அதாவது, 5 மடங்கு 500 ரூபாய் நோட்டுகளை அச்சிட முடிவு செய்யப்பட்டுள்ளது. அடுத்த சில நாட்களில் ரூ.2500 கோடி மதிப்பிலான 500 ரூபாய் நோட்டுகளை புழக்கத்தில் விட உள்ளோம். ஒரு மாதத்தில் ரூ70,000-75,000 கோடி மதிப்பிலான 500 ரூபாய் நோட்டுகளை அச்சிட உள்ளோம். அதனால், விரைவில் பணத்தட்டுப்பாடு பிரச்னை நீங்கும்” என்றார்.

மேலும் அதிக மதிப்புள்ள ரூ.2000 நோட்டுகளின் பயன்பாட்டை குறைக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. குஜராத், பீகார் உள்ளிட்ட பல மாநிலங்களில் ஏடிஎம்களில் திடீர் பணத்தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. போதிய அளவில் பணம் கிடைக்காததால் பொதுமக்கள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். தமிழகத்திலும் பணத்தட்டுப்பாடு நிலவி வருகிறது.