வெளிநாட்டுப் பெண்கள் கலந்துகொள்ளும் வினோதமான பார்ட்டிகளுக்கு பாம்பு விஷத்தை சப்ளை செய்ததாக ஐந்து நபர்களைக் கைது செய்திருக்கிறது நொய்டா காவல்துறை. பார்ட்டிகளும், கைதுகளும் இந்திய பணக்கார சமூகங்களுக்கு புதிதல்ல. ஆனால், இந்த முறை எல்லோரின் கைகளும் எல்விஷ் யாதவை நோக்கி திரும்பியிருக்கிறது.
குற்றம் சாட்டப்பட்டவர்கள் எல்விஷின் பெயரை சொன்ன பின்னர்தான், அவர் பெயரையும் FIRல் இணைத்திருக்கிறார்கள். எல்விஷ் யாதவ் இதுவரையில் கைது செய்யப்படவில்லை. என்ன பில்ட் அப் எல்லாம் பயங்கரமா இருக்கு... பெரிய டானா என்றெல்லாம் யோசிக்க வேண்டியதில்லை. எல்விஷ் வட இந்திய இளசுகளின் இணைய சூப்பர்ஸ்டார்.
இந்தப் பெயரை நம்மில் பெரும்பாலானோர் இதற்கு முன்னர் கேள்விப்பட்டிருக்கக்கூட வாய்ப்பில்லை. எல்விஷ் யாதவ் ஒரு சோஷியல் மீடியா இன்ஃப்ளூயன்ஸர். 1.5 கோடி சப்ஸ்கிரைபர்களுடன் Elvish yadav என்னும் பெயரிலேயே யூடியூப் சானல் ஒன்றை வைத்திருக்கிறார். அதில் 200க்கும் குறைவான வீடியோக்களே இருக்கின்றன.
எல்லாமே மில்லியன் வியூஸ் தான். இன்னொரு சானலான Elvish Yadav Vlogsல் கிட்டத்தட்ட 80 லட்சம் சப்ஸ்கிரைபர்கள். இன்ஸ்டாகிராமிலும் தம்பி கில்லி தான். அங்கேயும் விரைவில் 2 கோடி ஃபாலோயர்ஸ் எண்ணிக்கையை தொடவிருக்கிறார் எல்விஷ்.
சினிமாக்களில் இந்த வினோத பார்ட்டிகள் என்றாலே பெரும் பணம் படைத்த பணக்கார பெற்றோர்களின் பிள்ளைகளைத்தான் காட்சிப்படுத்துவார்கள். ஆனால், தற்போது அதில் சில மாற்றங்கள் நிகழ்ந்திருக்கிறது. தற்போதைய சூழலில் ஒருவர் பிரபலமாக யூடியூப், இன்ஸ்டா போன்றவற்றில் பிரபலமாக இருந்தாலே போதுமானது. எல்லா வாய்ப்புகளுமே தானாக வந்துசேரும். அப்படித்தான் சல்மான் கான் நடத்தும் பிக்பாஸ் OTT சீசன் 2வுக்கான வாய்ப்பு எல்விஷ் யாதவுக்கு வருகிறது. அதுவும் ஒய்ல்டு கார்டு என்ட்ரி.
ஒய்ல்டு கார்டு என்ட்ரியாக இருந்தாலும் சீசனின் வெற்றியாளர் எல்விஷ்தான். இறுதிப்போட்டியில் அவர் அள்ளிய ஓட்டுக்கள் எவ்வளவு தெரியுமா..? அன்புமணி ஓவியாவுக்கு விழுந்த ஓட்டுக்கே அவ்வளவு அங்கலாய்த்துக்கொண்டார். எல்விஷ் வாங்கிய ஓட்டுக்கள் பற்றியெல்லாம் தெரிந்தால்..? 28 கோடி வாக்குகள் அதுவும் 15 நிமிடங்களில் .
சிறுவயதிலேயே மாதத்திற்கு 10 லட்சத்திற்கு மேல் வருமானம் என்பதால் ஆடம்பரமான வாழ்க்கைக்கு மாறியிருக்கிறார். லக்ஸுரி கார்களை வாங்கிக்குவிப்பது எல்விஷின் ஜாலி விளையாட்டுக்களில் ஒன்றாம். இந்த செப்டம்பர் மாதம், அவர் வாங்கியிருக்கும் காரின் விலை 1.5 கோடி.
போதை தடுப்புப் பிரிவு, வன விலங்குத் துறை, நொய்டா காவல்துறை இந்த முறை தேடுதல் வேட்டையில் ஒரு பெரிய படையே இறங்கியிருக்கிறது. அதன் அடிப்படையில் தான் Rahul, Titunath, Narayan, Ravinath, & Jaikaran என ஐவரைக் கைது செய்திருக்கிறார்கள். விலங்கு நல ஆர்வலரான கௌரவ் குப்தா கொடுத்த புகாரின் அடிப்படையிலேயே இந்தக் கைது நடைபெற்றதாக சொல்லப்படுகிறது.
மேனகா காந்தியின் NGO இந்த ஆப்பரேசனை நடத்தியிருக்கிறது. 5 கோப்ரா, 1 பைத்தான். 1 இரட்டை தலை நாகம், 1 சாரைப் பாம்பை மீட்டிருக்கிறார்கள்.
எல்விஷ் இதுகுறித்து வெளியிட்ட வீடியோவில், தன் பெயரை கலங்கப்படுத்த இதுபோன்ற விஷயங்களில் தன்னை வேண்டுமென்றே சிக்கவைக்கிறார்கள் என பேசியிருக்கிறார்.
நம் ஊருக்கு ஒரு பப்ஜி மதன் என்றால், வட இந்தியாவுக்கு ஒரு எல்விஷ். ஆனால், ஆயிரக்கணக்கில் இப்படியான நபர்கள் இருக்கிறார்கள் என்பதே கசப்பான உண்மை.