இந்தியா

பெலுகான் படுகொலை வழக்கு: பிரியங்காவுக்கு எதிராக நீதிமன்றத்தில் மனு

பெலுகான் படுகொலை வழக்கு: பிரியங்காவுக்கு எதிராக நீதிமன்றத்தில் மனு

rajakannan

பெலுகான் படுகொலை வழக்கில் நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக கருத்து தெரிவித்ததாக கூறி பிரியங்கா காந்திக்கு எதிராக நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 

ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த பெலுகான் என்ற பால் வியாபாரி கடந்த 2017 பசு பாதுகாவலர்கள் என்று கூறிக் கொள்பவர்களால் அடித்து கொலை செய்யப்பட்டார். இந்தப் படுகொலை தொடர்பான வழக்கு ராஜஸ்தான் விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. படுகொலை சம்பவம் தொடர்பாக வீடியோ தெளிவாக இல்லாததால் குற்றம்சாட்டப்பட்ட 6 பேரையும் வழக்கில் இருந்து விடுவித்து நீதிமன்றம் சில தினங்களுக்கு முன்பு தீர்ப்பு அளித்தது. 

குற்றம்சாட்டப்பட்ட 6 பேரும் விடுவிக்கப்பட்டதற்கு சிலர் அதிருப்தியை வெளிப்படுத்தினர். தன்னுடைய தந்தையை கொன்றது யார் என பெலுகானின் மகன் கேள்வி எழுப்பியிருந்தார். ராஜஸ்தான் அரசும் இந்த வழக்கை மீண்டும் விசாரிக்க உத்தரவிட்டுள்ளது. இதற்காக சிறப்பு விசாரணைக் குழுவும் அமைக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, வழக்கின் தீர்ப்பு குறித்து தன்னுடைய ட்விட்டரில் கருத்து தெரிவித்திருந்த காங்கிரஸ் கட்சிய தேசிய பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி, “பெலுகான் வழக்கில் கீழமை நீதிமன்றத்தின் தீர்ப்பு அதிர்ச்சி அளிக்கிறது. நம்முடைய நாட்டில், மனிதாபிமானமற்ற செயல்களுக்கு இடமில்லை. கூட்டுக் கொலை மிகவும் கொடூரமான குற்றம்” என கூறியிருந்தார்.

இந்நிலையில், நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக கருத்து தெரிவித்ததாக பிரியங்கா காதிக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. பிகார் மாநிலத்தைச் சேர்ந்த சுதிர் ஓஜா என்பவர் இந்த வழக்கினை தொடர்ந்துள்ளார். நீதிமன்றத்தை பிரியங்கா அவமதிப்பு செய்துள்ளதோடு, அவரது கருத்து மதரீதியான பதற்றத்தை ஏற்படுத்துவதைப் போல் உள்ளது என சுதிர் ஓஜா கூறியுள்ளார்.