மாதவி லதா புதிய தலைமுறை
இந்தியா

மசூதியை நோக்கி அம்புவிடும் சைகை சர்ச்சை.. ஹைதராபாத் பாஜக வேட்பாளர் மீது வழக்குப்பதிவு!

ராமநவமி நிகழ்ச்சியில் மசூதியை நோக்கி வில் அம்புகளை ஏவுவதுபோல் செய்கை காட்டிய ஹைதராபாத் பாஜக வேட்பாளர் மாதவி லதா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Prakash J

17 மக்களவைத் தொகுதிகள் உள்ள தெலங்கானாவில், அடுத்த மாதம் 13ஆம் தேதி ஒரேகட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதன் தலைநகராக அறியப்படும் ஹைதராபாத்தில், பரதநாட்டிய நடனக் கலைஞரான மாதவி லதா, பாஜகவின் சார்பில் நிறுத்தப்பட்டுள்ளார். இவர் கடந்த ஏப்ரல் 17ஆம் தேதி நடைபெற்ற ராமநவமி நிகழ்ச்சியில் தன்னுடைய ஆதரவாளர்களுடன் கலந்துகொண்டபோது, அங்கிருந்த மசூதியை நோக்கி வில் அம்புகளை ஏவுவதுபோல் செய்கை காட்டியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது. பாஜக வேட்பாளர் மாதவி லதாவின் இந்தச் செயலுக்கு பலரும் கண்டனம் தெரிவித்தனர். இதுதொடர்பாக மாதவி லதா மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கக்கோரி பலரும் வலியுறுத்தினர்.

இதையும் படிக்க: பூச்சிக்கொல்லி மருந்து அதிகம்.. ஆய்வில் தகவல்.. எவரெஸ்ட் மீன் மசாலாவைத் தடை செய்த சிங்கப்பூர்!

இந்த வீடியோ வைரலான நிலையில், மாதவி லதா மன்னிப்பும் கோரியிருந்தார். இதற்கிடையே, இஸ்லாம் மக்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் மாதவி லதா வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது, பெண்மணி உள்பட சிலர் அவரைப் புறக்கணித்த வீடியோ இணையத்தில் வைரலானது.

இந்த நிலையில், மசூதியை நோக்கி வில் அம்புகளை ஏவுவதுபோல் செய்கை காட்டியது தொடர்பாக ஹைதராபாத்தைச் சேர்ந்த ஷேக் இம்ரான் என்பவர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், மாதவி லதா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவு 295-Aன்கீழ் (வேண்டுமென்றே மற்றும் தீங்கிழைக்கும் செயல்கள், மதம் அல்லது மத நம்பிக்கைகளை அவமதிப்பதன் மூலம் எந்த வகுப்பினரின் மத உணர்வுகளையும் சீற்றம் செய்யும் நோக்கம்) மாதவி லதா மீது ஏப்ரல் 20 அன்று வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து, ஷேக் இம்ரான் மாதவி லதா மீது தேர்தல் ஆணையத்திடமும் புகார் அளித்துள்ளார்.

இதுகுறித்து மாதவி லதா, “இது கேலிக்கூத்து. இஸ்லாம் சமூகத்தினருக்கு எதிரானவராக நான் இருந்தால், புனித ரமலான் மாதத்தின்போது ஊர்வலத்தில் பங்கேற்று பலருக்கும் என் கரங்களால் உணவு வழங்கியது ஏன்” எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதையும் படிக்க: ”உங்கள் செல்வத்தை இஸ்லாமியர்களுக்கு பகிர்ந்து கொடுத்துவிடுவார்கள்” - பிரதமர் மோடி சர்ச்சை பேச்சு!