Brajwal Revanna MP pt desk
இந்தியா

“பிரஜ்வால் ரேவண்ணா மீதான பாலியல் புகார், பாஜகவிற்கு ஏற்கெனவே தெரியும்” - எதிர்க்கட்சிகள்

webteam

செய்தியாளர்: ம.ஜெகன்நாத்

கர்நாடக மாநிலம் மதச்சார்பற்ற ஜனதா தளத்தை சேர்ந்த முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரன் பிரஜ்வல் ரேவண்ணா. இவர், ஹாசன் எம்.பியாக பதவி வகிக்கிறார். இம்முறை மக்களவைத் தேர்தலில், மதச்சார்பற்ற ஜனதா தளம் வேட்பாளராக மீண்டும் களமிறங்கி உள்ளார்.

இந்த நிலையில், பல பெண்களுடன் அவர் நெருக்கமாக இருக்கும் வீடியோக்கள், புகைப்படங்கள் கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. மேலும் தங்களை அவர் தவறாக பயன்படுத்திக் கொண்டதாகவும், நெருக்கமாக இருக்கும்போது வீடியோ எடுத்து, மிரட்டுவதாகவும் சில பெண்கள் கன்னட செய்தி தொலைக்காட்சிகளில் தெரிவித்திருந்தனர்.

Brajwal Revanna MP

இதையடுத்து அம்மாநில மகளிர் ஆணைய தலைவி நாகலட்சுமி சவுத்ரி, “ஹாசனில் செல்வாக்குமிக்க ஒரு அரசியல் தலைவர், பெண்களை கட்டாயப்படுத்தி பாலியல் தொல்லை கொடுத்து, வீடியோ பதிவு செய்துள்ளார். இந்த வீடியோக்கள் சமூகத்தில் பரவி பெண்களை முகம் சுழிக்க வைத்துள்ளது. எனவே சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க எஸ்.ஐ.டி அமைக்கவும்” என கர்நாடக முதல்வர் சித்தராமையாவுக்கு கடிதம் எழுதி இருந்தார்.

இதன் அடிப்படையில், சிறப்பு விசாரணை குழு அமைப்பதற்கு அம்மாநில அரசு முடிவு செய்துள்ளதாக முதல்வர் சித்தராமையா தெரிவித்த நிலையில், பிரஜ்வல் ரேவண்ணா, வெளிநாட்டுக்கு சென்றுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதையடுத்து பெங்களூருவில் நேற்று பெண்கள் அவருக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில், பிரஜ்வல் ரேவண்ணா தொடர்பான ஆபாச வீடியோ வழக்கில் சிஐடி பிரிவு எஸ்ஐடி (சிறப்பு புலனாய்வுக் குழு), ஐபிஎஸ் அதிகாரி விஜய் குமார் சிங் தலைமையில் விசாரிக்கப்படும் எனக் கூறப்பட்டுள்ளது. இந்தக் குழுவில் சிஐடி டிஜி சுமன் டி பென்னேகர் மற்றும் ஐபிஎஸ் அதிகாரி சீமா லட்கர் ஆகியோர் உள்ளனர். மேலும் பிரஜ்வல் மீது ஐபிஎஸ் பிரிவுகள் 354 ஏ, 354 டி, 506, மற்றும் 509 ஆகியவற்றின் கீழ் ஹோலேநரசிபூர் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இருப்பினும் ‘ரேவண்ணாவுக்கு ஏன் தேர்தலில் போட்டியிட மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டது’ என எதிர்க்கட்சிகளும், அரசியல் விமர்சகர்களும் பிரிஜ்வலின் செயலைக் கடுமையாக விமர்சனம் செய்துவருகின்றனர்.

இந்நிலையில் நேற்று முன்தினம் (ஏப்ரல் 28 ஆம் தேதி) பிரஜ்வாலுக்கு எதிராக காங்கிரஸ் போராட்டம் நடத்தியது. அதன்பின் போராட்டத்துடன் தொடர்புடைய ரூபா ஹாசன், “விசாரணையை தாமதப்படுத்த அரசு எஸ்ஐடி விசாரணையை ஒரு சாதகமாக பயன்படுத்தக்கூடாது. இந்த வழக்கை நீதிமன்றங்கள் கண்காணிக்க வேண்டும் என விரும்புகிறோம்” என தெரிவித்தார். அதேநேரம் பாஜக தலைவர்கள் இந்த விவகாரம் தொடர்பாக மவுனம் சாதிப்பதையும் காங்கிரஸ் கட்சி விமர்சனம் செய்ய தவறவில்லை.

பிரஜ்வல்

இந்த விவகாரங்கள் அனைத்தும் பாஜகவிற்கு ஏற்கனவே தெரிந்துள்ளது என்றும் ஒரு தரப்பு கூறுகிறது. கர்நாடகத்தின் தகவல் தொழில்நுட்பம் மற்றும் உயிரிதொழில்நுட்பத்துறை அமைச்சர் பிரியங்க் கார்கே கூறுகையில், “இந்த குற்றச்சாட்டுகள் பற்றி தெரிந்திருந்தும் தேசிய ஜனநாயக கூட்டணி பிரஜ்வாலுக்கு மீண்டும் வாய்ப்பு கொடுத்தது ஏன்?” என கேள்வி எழுப்பியுள்ளார்.

இதற்கிடையே India today செய்தியாளர் ஸ்நேகா மோர்தானி தனது எக்ஸ் பதிவில் இது தொடர்பாக பதிவிட்டுள்ளார். அதில், “2023 டிசம்பரிலேயே பிரஜ்வல் ரேவண்ணாவின் வீடியோக்கள் குறித்து பாஜகவை எச்சரித்த ஹாசனைச் சேர்ந்த பாஜக தலைவர் ஒருவர், வீடியோக்கள் குறித்து கட்சிக்கு எச்சரித்துள்ளார்” என குறிப்பிட்டுள்ளார். மேலும் பாஜக அதை ஏன் கண்டுகொள்ளவில்லை என்று கேள்வியும் எழுப்பியுள்ளார்.

மேலும், பாஜக தலைவர் தேவராஜ் கவுடாவுடன் அவர் நடத்திய உரையாடலையும் பகிர்ந்துள்ளார். இருப்பினும், பிரஜ்வல் ரேவண்ணா, குமாராசாமியின் குடும்ப உறுப்பினராக இருப்பதே அவர் கட்சியில் நீடிக்கவும் தேர்தலில் போட்டியிடவும் காரணம் என விமர்சனம் எழுந்துள்ளது.

இதுகுறித்து பேசியிருக்கும் குமாரசாமி, “இது தனிநபர் பிரச்னை. இதில் ஏன் குடும்பத்தை தொடர்புபடுத்த வேண்டும்? ரேவண்ணா குடும்பத்தினரிடம் இதுகுறித்து கேளுங்கள். தேவகவுடா குடும்பத்தை இதில் இழுக்க வேண்டாம்... நாங்கள் பெண்களை மதிப்பவர்கள். தனியாகவே வாழ்கிறோம் நாங்கள்” எனக் கூறியிருக்கிறார்.