இந்தியா

கர்நாடகாவை அச்சுறுத்திய ஆட்கொல்லி புலி சடலமாக கண்டெடுப்பு!

கர்நாடகாவை அச்சுறுத்திய ஆட்கொல்லி புலி சடலமாக கண்டெடுப்பு!

jagadeesh

கர்நாடக மாநிலம் குடகு மாவட்டத்தில் 4 பேரை கொன்ற புலியை இறந்த நிலையில் வனத்துறையினர் கண்டுபிடித்துள்ளனர்.

கர்நாடக மாநிலத்தின் பிரபலமான மலைவாசத்தளம் குடகு மாவட்டம். இங்கு கடந்த சில வாரங்களாக ஆட்கொல்லி புலி ஒன்று உலா வருவதாக உள்ளூர்வாசிகள் வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். வனத்துறையினரும் தேடுதல் வேட்டையை தொடங்கினர். ஆனால் இது எதுவும் பலனளிக்கவில்லை. இதனையடுத்து அந்தப் புலி 8 வயது சிறுவன் உள்பட 3 பேரை கொண்டது. இதனையடுத்து கர்நாடக மாநிலத்தில் இந்தப் பிரச்னை விஸ்வரூபம் எடுத்தது.

இந்தச் சம்பவம் குறித்து கர்நாடக சட்டப்பேரவையில் விவாதிக்கப்பட்டது. அம்மாநில வனத்துறை அமைச்சர் அரவிந்த் லிம்பாவலி "வனத்துறை அதிகாரிகளிடம் ஆள்கொல்லி புலியை கண்டதும் சுட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது" என்றார். இதனால் புலியை தேடும் பணி அயர்ச்சி இல்லாமல் தொடர்ந்துக்கொண்டே இருந்தது. இந்தப் புலியை தேடி கர்நாடக மாநில வனத்துறையை சேர்ந்த 150-க்கும் மேற்பட்டோர் தேடுதல் பணியில் ஈடுபட்டு வந்தனர்.

இந்நிலையில் குடகு மாவட்டத்தின் பொன்னம்பேட்டே தாலுக்காவில் 10 வயதான ஆட்கொல்லிப் புலி உயிரிழந்த நிலையில் சடலமாக வனத்துறையால் கண்டுபிடிக்கப்பட்டது. ஏற்கெனவே அந்தப் புலியை சுட்ட காயம் இருந்ததால், இது நிச்சயம் மக்களை அச்சுறுத்திய ஆட்கொல்லி புலிதான் என வனத்துறையினர் தெரிவித்தனர். ஆனால் அந்தப் புலி எப்படி இருந்தது என்பது குறித்த தகவல்கள் புலியின் உடற்கூர் ஆய்வுக்கு பின்பே தெரிய வரும் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.