லக்னோ புதிய தலைமுறை
இந்தியா

கார் மோதியதில் தூக்கி வீசப்பட்ட மனைவி, மகன்; 3 கிமீ வரை சக்கரத்தில் சிக்கி இழுத்து செல்லப்பட்ட நபர்!

உத்திரப் பிரதேச மாநிலம், லக்னோவில் இரு சக்கர வாகனத்தின் மீது நேருக்கு நேர் மோதிய காரினால், 3 கிமீ வரை இழுத்து செல்லப்பட்ட நபர். மருத்துவமனைக்கு கொண்டுசெல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அரங்கேறியுள்ளது.

ஜெனிட்டா ரோஸ்லின்

உத்திரப் பிரதேச மாநிலம், லக்னோவில் இரு சக்கர வாகனத்தின் மீது நேருக்கு நேர் மோதிய காரினால், 3 கிமீ வரை இழுத்து செல்லப்பட்ட நபர், மருத்துவமனைக்கு கொண்டுசெல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அரங்கேறியுள்ளது.

உத்திரபிரதேசத்தினை சேர்ந்த வீரேந்திர குமார், தனது மனைவி மற்றும் ஐந்து வயது மகனுடன் டால்மாவ் நகரை நோக்கி இருசக்கரவாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது, அவர்களுக்கு எதிராக வந்த இனோவா கார் ஒன்று நேருக்கு நேர் அதிபயங்கர வேகத்தில் மோதியுள்ளது.

இதில், வீரேந்திர குமாரின் மகனும், மனைவியும் பைக்கில் இருந்து தூக்கி எறியப்பட்டனர். ஆனால், விரேந்திர குமார் காருடைய சக்கரத்தின் இடையில் சிக்கிய நிலையில், நீண்ட தூரம் இழுத்து செல்லப்பட்டுள்ளார்.

இருசக்கர வாகனத்தின் மீது மோதிய பிறகும் காரை ஓட்டிய நபர் நிறுத்தாமல் 3 கிமீ தூரம் வரை வீரேந்திரனை இழுத்து சென்றுள்ளார். இதனையடுத்து, காரை ஓட்டி வந்த நபர் தப்பிச் செல்ல முயற்சித்துள்ளார். தப்பிசென்ற ஓட்டுநரை அந்த வழியில் வந்தவர்கள் பிடித்து போலிஸில் ஒப்படைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதி வேகத்தில் இரண்டு வாகனங்களும் ஒன்றோடு ஒன்று மோதியதால் காரின் முன்புறம் நொருங்கியது.

மேலும் இது குறித்து அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கையில், “காயம் அடைந்த வீரேந்திரா , அவரின் மனைவி ரூபால், மகன் அனுராக் ஆகியோர் ரேபரேலியில் உள்ள சமூக நல மையத்திற்கு முதலில் அழைத்துச் செல்லப்பட்டனர். பின்னர், அங்கிருந்து அங்குள்ள மாவட்ட மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

ஆனால், கொண்டும் செல்லும் வழியிலேயே வீரேந்திரன் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். அவரது மனைவி மற்றும் மகன் மேல் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.” என்று தெரிவித்துள்ளனர்.