ஸ்மிருதி சிங், ரவி பிரபாத் சிங் எக்ஸ் தளம்
இந்தியா

”காதல் என்றபெயரில் என் மகனை ஏமாற்றியுள்ளார்”-மருமகள் மீது வீரமரணமடைந்த கேப்டனின் தந்தை குற்றச்சாட்டு

Prakash J

கேப்டன் அன்ஷுமான் சிங்கின் வீரமரணத்திற்குப் பிறகு அவருடைய தியாகத்தைப் போற்றும்வகையில் கீர்த்தி சக்ரா விருது அறிவிக்கப்பட்டது. இதை குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு, கேப்டன் அன்ஷுமான் சிங்கின் மனைவி ஸ்மிருதி சிங்கிற்கு வழங்கியிருந்தார். சமூக வலைதளங்களில் இந்தச் செய்தி பகிரப்பட்டதற்குப் பிறகு, கேப்டனின் குடும்பம் சார்பில் அடுத்தடுத்து வெளிவரும் தகவல்களால் ட்ரோல் செய்யப்பட்டு வருகிறது.

கேப்டனின் மனைவியான ஸ்மிருதியின் கைம்பெண் கோலத்தை வைத்து மிகவும் இழிவான முறையில் கருத்து ஒன்று பதியப்பட்ட நபர் மீது வழக்குப் பதியப்பட்டுள்ளது. இது ஒருபுறமிருக்க, மறுபுறம் தன்னுடைய மருமகள் ஸ்மிருதி மீதே அன்ஷுமான் சிங்கின் பெற்றோர் அடுத்தடுத்த குற்றச்சாட்டுகளை வைத்தனர். அனுஷுமான் சிங்கின் தந்தை ரவி பிரபாத் சிங், “எங்கள் மருமகள் (ஸ்மிருதி) எங்களுடன் வாழவில்லை. எங்கள் மகனின் மரணத்திற்குப் பிறகு பெரும்பாலான உரிமைகளை ஸ்மிருதி பெறுகிறார். NOKக்கு அமைக்கப்பட்டுள்ள அளவுகோல் சரியானது அல்ல. அதனால்தான் NOK-இன் வரையறை சரி செய்யப்பட வேண்டும்” எனத் தெரிவித்திருந்தார்.

எனினும், இதுகுறித்து ஸ்மிருதி எந்தக் கருத்தும் தெரிவிக்கவில்லை. இந்த நிலையில்தான் ராணுவமே இருதரப்புக்கும் பணத்தைப் பிரித்துக் கொடுத்ததாகச் செய்திகள் வெளியாயின. ஆர்மி குரூப் இன்சூரன்ஸ் ஃபண்ட் (AGIF) தொகையான ரூ.1 கோடியை ஸ்மிருதி சிங்கிற்கும் அன்ஷுமன் சிங்கின் பெற்றோருக்கும் தலா ரூ.50 லட்சம் பிரித்து வழங்கப்பட்டதாகவும், அதேநேரத்தில் அன்ஷுமன் சிங் ஓய்வூதியத் தொகை மட்டும் அவருடைய மனைவிக்கு நேரடியாக வழங்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. மேலும், உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் ரூ.50 லட்சம் நிதியுதவியில் தலா ரூ.35 லட்சம் அவரது மனைவிக்கும், ரூ.15 லட்சம் அவரது பெற்றோருக்கும் வழங்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க: ”பட்டம் பெறுவதால் பயனில்லை; பஞ்சர் கடை வைக்கலாம்” - மாணவர்களுக்கு அறிவுரை கூறிய பாஜக எம்.எல்.ஏ.!

இந்த நிலையில், தன் மருமகள் மீது மேலும் ஒரு குற்றச்சாட்டை அனுஷுமான் சிங்கின் தந்தை ரவி பிரபாத் சிங் வைத்துள்ளார். இதுகுறித்து ஊடகம் ஒன்றுக்கு அவர் பேட்டியளித்திருப்பதாகக் கூறப்படுகிறது. அதில், ”நானும் என் குடும்பமும் பணத்திற்குப் பேராசைப்படுபவர்கள் அல்ல. ஸ்மிருதி, என் மகனைக் காதலிக்கவில்லை. அவர், காதல் என்ற பெயரில் என் மகனை ஏமாற்றியுள்ளார். அவர், இப்போது பணம் மற்றும் கீர்த்தி சக்ரா விருதுடன் ஆஸ்திரேலியாவுக்கு தப்பிச் செல்ல திட்டமிட்டுள்ளார். ஸ்மிருதிக்கு மட்டும் மகளிர் ஆணைய தலைவி அனுதாபப்படுவது ஏன்? அன்ஷுமானின் தாயும் ஒரு பெண்தானே? அவருடைய வலி யாருக்குத் தெரியும்” எனத் தெரிவித்துள்ளார்.

இந்தக் கருத்துக்கும் ஸ்மிருதி இதுவரை எந்தக் கருத்தும் தெரிவிக்கவில்லை. ஆனால், ஸ்மிருதி மீது அதாவது, அவர்களுடைய மருமகள் மீதே அனுஷுமான் சிங்கின் பெற்றோர் ஏன் தொடர்ந்து குற்றஞ்சாட்டி வருகின்றனர் எனத் தெரியவில்லை. காதல் என்ற பெயரில் தன் மகனை ஏமாற்றியிருப்பதாக ரவி பிரபாத் சிங் கூறுகிறார். ஆனால், ஸ்மிருதி பேசியிருக்கும் வீடியோவில் உண்மையான காதலும், உணர்ச்சி கலந்த கண்ணீரும் தெரிகிறது எனப் பயனர்கள் பதிவிட்டு வருகின்றனர்.

இதையும் படிக்க: ”நான் குற்றவாளி அல்ல; உண்மை வெளிவரும்” - குற்றச்சாட்டிற்கு பதிலளித்த புனே பயிற்சி பெண் IAS அதிகாரி!