இந்தியா

“கொரோனா பிரச்னைகளை வேடிக்கை பார்க்க முடியாது; நாங்களும் விசாரிப்போம்” - உச்சநீதிமன்றம்

“கொரோனா பிரச்னைகளை வேடிக்கை பார்க்க முடியாது; நாங்களும் விசாரிப்போம்” - உச்சநீதிமன்றம்

Sinekadhara

ஆக்ஸிஜன் பற்றாக்குறை உள்ளிட்ட கொரோனா தொடர்பான விவகாரங்களை உயர் நீதிமன்றங்கள் தொடர்ந்து விசாரிப்பதைதான் நாங்கள் விரும்புகிறோம், அதே நேரத்தில் தேசிய அளவிலான பிரச்னைகளை கையாள்வதற்கும் நாங்கள் தயாராக இருக்கிறோம் என உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.

நாடு முழுவதிலும் பல்வேறு மாநிலங்களில் ஆக்சிஜன் பற்றாக்குறை, ரெம்டெசிவர் உள்ளிட்ட கொரோனாவிற்கான அத்தியாவசிய மருந்து பொருட்களின் பற்றாக்குறை ஏற்பட்டுள்ள நிலையில், இந்த இக்கட்டான சூழல் தொடர்பான விவகாரங்களை டெல்லி உயர்நீதிமன்றம் உள்ளிட்ட பல்வேறு உயர் நீதிமன்றங்கள் தனித்தனியாக விசாரித்து, அவ்வப்போது உரிய உத்தரவுகளை பிறப்பித்து வருகின்றன.

இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக கடந்த வாரம் தானாக முன்வந்து வழக்கு பதிவு செய்த உச்சநீதிமன்றம் இனி இந்த விவகாரங்களை தாங்களே விசாரிப்போம் என அறிவித்தது. உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இருந்து சில தினங்களுக்கு முன்பு ஓய்வுபெற்ற எஸ் ஏ பாப்டேவின் இந்த முடிவு கடுமையாக விமர்சிக்கப்பட்டது. உச்சநீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம் இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.

இந்த சூழலில் இந்த வழக்கு என்று உச்சநீதிமன்ற நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது பேசிய நீதிபதி ஆக்ஸிஜன் பற்றாக்குறை உள்ளிட்ட இந்த விவகாரங்களை உயர் நீதிமன்றங்கள் விசாரிப்பதை நாங்கள் தடுக்க விரும்பவில்லை. அதே நேரத்தில் நாங்களும் மவுனமாக இருக்க விரும்பவில்லை. உயர் நீதிமன்றங்கள் அதிகாரங்களைக் கொண்ட ஒரு அமைப்பு கண்காணிப்பு பணிகளை மிக தீவிரமாக செய்யக்கூடிய அமைப்பு. எனவே அவர்கள் தொடர்ந்து இந்த விவகாரங்களை விசாரிப்பதற்கு நாங்களும் விரும்புகிறோம். எனினும், அவர்களது அதிகார வரம்பிற்கு வராத பல்வேறு விஷயங்களை நாங்கள் விசாரிக்கிறோம். குறிப்பாக தேசிய அளவிலான பிரச்னைகள் ஏற்படும்போது அதனை முன்னின்று விசாரிக்க வேண்டியது உச்சநீதிமன்றத்தின் பொறுப்பு கூறினார்.

இதனை தொடர்ந்து வாதங்களை முன் வைத்த மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, தமிழகம், கேரளா உள்ளிட்ட சில மாநிலங்களில் ஆக்சிஜன் கையிருப்பை வெற்றிகரமாக கையாள்வதற்கு பாராட்டுகளை பெற்று வருகிறது. ஆனால் மற்ற பகுதிகள் பிரச்னையை சந்தித்து வரும் நேரத்தில் நாம் அனைவரும் ஒற்றுமையுடன் இருக்க வேண்டும் இது கட்சி சார்ந்த பிரச்சனை அல்ல; நாடு சார்ந்த பிரச்னை என கூறினார்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதி, மத்திய அரசின் வசம் ராணுவத்திற்கான ஏர் ஆம்புலன்ஸ் உள்ளிட்ட மருத்துவ வசதிகள் எல்லாம் இருக்கக்கூடிய நிலையில் அவை எல்லாம் முழுமையாக பயன்படுத்தப்படுகிறதா? என கேள்வி எழுப்பினார்.

தொடர்ந்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், நாடு முழுவதும் ஆக்சிஜன் தயாரிப்பு விநியோகம் மாநில அரசுகளுக்கு தேவைப்படும் அளவு அதனை மாநில அரசுகளுக்கு விநியோகம் செய்யும் முறை, படுக்கை வசதிகள் உள்ளிட்டவை மருத்துவமனைகளில் எந்த நிலைமைகளில் உள்ளது, ரெம்டெசிவிர் உள்ளிட்ட மருந்து பொருட்கள் கையிருப்பில் எவ்வளவு உள்ளது, தடுப்பூசிக்கான கொள்முதல் விலை மற்றும் விநியோக விலை உள்ளிட்ட கொரோனாவின் இரண்டாவது அலையில் மக்கள் சந்திக்கும் அத்தனை பிரச்னைகள் தொடர்பான முழுமையான விவரங்களை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யுமாறு மத்திய அரசுக்கு உத்தரவு பிறப்பித்தனர்.

மேலும் இந்த வழக்கு விசாரணை ஏப்ரல் 30ஆம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

<iframe width="420" height="315" src="https://www.youtube.com/embed/cvcwYJf30M4" title="YouTube video player" frameborder="0" allow="accelerometer; autoplay; clipboard-write; encrypted-media; gyroscope; picture-in-picture" allowfullscreen></iframe>

மேலும் இந்த வழக்கில் நீதிமன்றத்திற்கு உதவுவதற்காக மூத்த வழக்கறிஞர்கள் மீனாட்சி அரோரா மற்றும், ஜெய்தீப் குப்தா ஆகியோரை நியமித்தனர். முன்னதாக லண்டனில் வசித்து வரும் வழக்கறிஞர் ஹரிஷ் சால்வேவை நீதிமன்றத்துக்கு உதவும் வழக்கறிஞராக நியமித்து அதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியதை அடுத்து, அவர் அந்த பொறுப்பிலிருந்து விலகி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.