இந்தியா

பழைய ரூபாய் நோட்டுகளை மாற்ற மேலும் அவகாசம் அளிக்க முடியாது: மத்திய அரசு

பழைய ரூபாய் நோட்டுகளை மாற்ற மேலும் அவகாசம் அளிக்க முடியாது: மத்திய அரசு

webteam

பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்காக இறுதி அவகாசம் என்ற பெயரில் மேலும் கால அவகாசம் கொடுக்க முடியாது என்று உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. 

இதுதொடர்பான வழக்கு ஒன்றில் மத்திய அரசு தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், பழைய ரூபாய் நோட்டுகளை மாற்ற கடைசி அவகாசம் என்ற பெயரில் மேலும் கால அவகாசம் அளிப்பது பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் நோக்கத்தை மொத்தமாக சீரழிக்கும் என்று கூறியுள்ளது. அதனால், மேலும் ஒரு காலஅவகாசத்தினை வழங்க முடியாது என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது. முன்னதாக, மத்திய அரசின் பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு எதிராகவும், பழைய ரூபாய் நோட்டுகளை மாற்ற காலஅவகாசம் அளிக்குமாறு மத்திய அரசுக்கு உத்தரவிடக் கோரியும் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை ஒரே வழக்காக உச்சநீதிமன்றம் விசாரித்து வருகிறது. இந்த வழக்கு கடந்த 5ம் தேதி விசாரணைக்கு வந்தபோது, பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்கு கடைசி அவகாசம் ஒன்றை வழங்குவது குறித்து மத்திய அரசு பரிசீலிக்குமா என்று நீதிமன்றம் கேள்வி எழுப்பியிருந்தது. இதுதொடர்பாக பதில் மனுத் தாக்கல் செய்யவும் மத்திய அரசுக்கு உத்தரவிட்டிருந்தது.