மத்தியப் பிரதேசத்தில் உள்ள தேசியப் பூங்கா ஒன்றில் பெண் புலியை ஆண் புலியே கொன்று தின்ற விநோத சம்பவம் நிகழ்ந்துள்ளது.
மத்தியப் பிரதேச மாநிலத்தில் உள்ள கன்ஹா தேசியப் பூங்காவில் ஏராளமான வனவிலங்குகள் வசிக்கின்றன. இங்கு புலிகளின் எண்ணிக்கையும் அதிகமாக உள்ளது. அங்கு இதுவரை நடக்காத விநோத சம்பவம் ஒன்று நடந்துள்ளது. ஒரு பெண் புலியுடன் சண்டையிட்ட ஆண் புலி ஒன்று அதனை கொன்று தின்றுள்ளது. இதுபோன்ற ஒரு சம்பவம் இதற்கு முன்னர் அந்தப் பூங்காவில் நடந்ததே இல்லை. ஏன் இந்தியாவில் உள்ள அனைத்து பூங்காவிலும், இன்னும் சொல்லவேண்டுமென்றால் பல ஆண்டுகளாக உள்ள புள்ளி விவரங்களின் அடிப்படையில் உலகில் எங்கும் இப்படி ஒரு விநோத சம்பவம் நிகழ்ந்தது இல்லையாம்.
வனத்துறை காவலர்கள் யானை மீது ரோந்துப் பயணம் சென்றபோது புலியின் எலும்புகள் மற்றும் பற்கள் ரத்தக் கரைகளுடன் சிதறிக்கிடந்துள்ளன. இதைக்கண்ட காவலர்கள் உடனே உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு வந்த அதிகாரிகள் புலியின் மரணத்தில் ஏற்பட்டிருக்கும் விநோதத்தைக் கண்டு அதிர்ந்துபோயுள்ளனர். ஏனென்றால், இறந்த கிடந்த பெண் புலியை ஒரு ஆண் புலி கொன்று தின்றுள்ளது என்ற தகவல், அவர்களுக்கு முற்றிலும் புதிதாக இருந்துள்ளது. இதற்கு முன்னர் பலமுறை புலிக்குட்டிகளை புலியே உண்ணும் சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. அது இயல்பு. ஆனால் ஒரு பெரிய புலியை மற்றொரு பெரிய புலி உண்டது இதுவே முதல் முறை என்கின்றனர்.
இது அந்த இனத்திற்கே ஏற்பட்ட ஒரு அழிவின் முன்னோட்டமோ என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் அதிகாரிகள் வருத்தம் தெரிவித்துள்ளனர். இதன்பின்னர் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் ஆங்காங்கே சிதறிக்கிடந்த புலியின் சில உடல்பாகங்களை கைப்பற்றிய வனத்துறை அதிகாரிகள், அதனை மேற்கொண்ட ஆய்விற்கு அனுப்பியுள்ளனர். மேலும் பெண் புலியை கொன்று தின்ற ஆண் புலிக்கு அவ்வப்போது போதிய உணவுகள் வழங்கப்பட்டுள்ளன. முறையான உணவு கிடைத்தும் அது இப்படி ஒரு விநோத செயலை செய்துள்ளது.
குறுகிய இடங்களுக்குள் புலிகள் எண்ணிக்கை அதிக அளவில் இருந்ததால், இப்படி ஒரு சம்பவம் நிகழ்ந்திருக்கலாமோ என்ற கோணத்திலும் ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்தியாவிலேயே அதிக புலிகள் வசிக்கும் மாநிலமாக மத்தியப் பிரதேசம் உள்ளது. இதற்காக கடந்த 1995ஆம் ஆண்டு அதற்கு ‘புலிகள் மாநிலம்’ என்ற பட்டம் வழங்கப்பட்டது. இந்தியாவில் 20% புலிகளும், உலகத்தில் 10% புலிகளும் மத்தியப் பிரதேசத்தில் தான் உள்ளன.