இந்தியா

3 மாதங்கள் ரேசன் வாங்காவிட்டால் ரேசன் அட்டை ரத்து - மத்திய அமைச்சர்

3 மாதங்கள் ரேசன் வாங்காவிட்டால் ரேசன் அட்டை ரத்து - மத்திய அமைச்சர்

webteam

மூன்று மாதங்களாக ரேசன் பொருட்கள் வாங்காத ரேசன் அட்டைகளை ரத்து செய்யுமாறு மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

புதுடெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய உணவுத்துறை அமைச்சர் ராம் விலாஷ் பசுவான், “ரேசன் பொருட்களின் தேவையை பெற விரும்பாதவர்கள், ரேசன் பொருட்கள் வாங்காத வசதி படைத்தவர்கள் போன்றவர்களின் ரேசன் அட்டைகள் ரத்து செய்யப்படும். ரேசன் பொருட்களை ரேசன் கடைகளுக்கு சென்று வாங்க இயலாத முதியோர்கள் மற்றும் ஊனமுற்றோர்கள் நாட்டில் உள்ளனர். அவர்களின் வீட்டு வாசலுக்கு சென்று ரேசன் பொருட்களை வழங்க வேண்டும்” என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், “பொதுப்பணித்துறை மூலம் வழங்கப்படும் ரேசன் பொருட்களை வாங்க முடியாமல் யாரும் பட்டினி மரணம் அடையக்கூடாது என அனைத்து மாநிலங்களுக்கும் அறிவுறுத்தியுள்ளோம். அத்துடன் மானியம் மூலம் வழங்கப்படும் தானியங்களை மக்களின் வீடு சென்று வழங்க தீவிர நடவடிக்கை எடுக்குமாறு அனைத்து மாநிலங்களிடமும் கூறியுள்ளோம். ரேசன் கடைகள் மூலம் வழங்கப்படும் உணவுப்பொருட்களின் விலையில் எந்த உயர்வும் செய்யப்படாது. அது ஏற்கனெவே வழங்கப்படும் ஜூலை 2013 உணவு சட்டப்படியே தொடரும். பொதுப்பணித்துறைகள் மூலம் ரேசன் கடைகளில் தற்போது வழங்கப்படும் அரிசி கிலோ ரூ.3, கோதுமை கிலோ ரூ.2 மற்றும் பயறு தானியங்கள் கிலோ ரூ.1 என்ற விலை தொடரும்” என்று தெரிவித்தார்.

பருவமழை மற்றும் பண்டிகை காலங்களில் காய்கறிகள் மற்றும் உணவுப்பொருட்களில் விலை உயர்த்தி விற்கப்படுவதை மாநில அரசுகள் கடுமையாக கண்டித்து நடவடிக்கை வேண்டும் என்று மத்திய அரசு ஏற்கெனவே கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.