இந்தியா

‘குழந்தைகள் உயிரிழப்பில் முந்தைய அரசை குறைகூறாதீர்கள்’ - சச்சின் பைலட் காட்டம்

‘குழந்தைகள் உயிரிழப்பில் முந்தைய அரசை குறைகூறாதீர்கள்’ - சச்சின் பைலட் காட்டம்

jagadeesh

ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில் உள்ள அரசு மருத்துவமனையில் உயிரிழந்த குழந்தைகளின் எண்ணிக்கை 110-ஆக உயர்ந்துள்ளது பலரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

ராஜஸ்தான் மாநிலம், கோட்டா நகரில் இயங்கி வரும் ஜே.கே.லான் அரசு மருத்துவமனையில் பச்சிளம் குழந்தைகள் மற்றும் சிறார்களுக்கான தீவிர சிகிச்சைப் பிரிவில் நூற்றுக்கும் மேற்பட்ட குழந்தைகள் அனுமதிக்கப்பட்டிருந்தனா். கடந்த ஒரு மாதத்தில் மட்டும் அந்த அரசு மருத்துவமனையில் 4,689 குழந்தைகள் அனுமதிக்கப்படுள்ளனர். இதில் உயிரிழந்த குழந்தைகளின் எண்ணிக்கை 110-ஆக நேற்று அதிகரித்தது.

இக்குழந்தைகள் நிமோனியா, ரத்தத்தில் தொற்று உள்ளிட்ட காரணங்களால் உயிரிழந்தது தெரிய வந்தது. இந்த விவகாரம் தொடர்பாக விளக்கம் கேட்டு ராஜஸ்தான் அரசுக்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மேலும் மத்திய அரசின் சிறப்புக் குழு ஜே.கே.லான் அரசு மருத்துவமனையை பார்வையிட்டு ஆய்வு செய்தது.

இது குறித்து கருத்து தெரிவித்த ராஜஸ்தான் மாநிலத்தின் துணை முதல்வரான சச்சின் பைலட் "குழந்தைகள் இறப்புக்கு மாநில அரசே முழு பொறுப்பேற்க வேண்டும். இதற்காக கடந்த கால அரசை குறை சொல்லி ஒரு பிரயோஜனமும் இல்லை" என தெரிவித்தார். அண்மையில் குழந்தைகள் இறப்பு குறித்து கூறிய ராஜஸ்தான் மாநில முதல்வர் அஷோக் கெலாட் " அரசு மருத்துவமனையில் குழந்தைகள் இறந்ததற்கு முன்னாள் பாஜக அரசின் திறன் இல்லாத நிர்வாகமின்மையே காரணம்" என்று குற்றஞ்சாட்டிருந்தார்.

இது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்குதான் மாநில துணை முதல்வரான சச்சின் பைலட் இவ்வாறு கூறியுள்ளார், மேலும் தொடர்ந்த அவர் " இந்த இறப்பு எங்களுடைய பொறுப்பு. ராஜஸ்தானில் ஆட்சிக்கு வந்து 13 மாதங்கள் நிறைவடைந்துவிட்டது. எனவே, இதற்கு கடந்த கால அரசை குறை சொல்வது தவறானது. இதற்கு பொறுப்பேற்காமல் தட்டி கழித்துவிட்டு தப்பியோட முடியாது. கடந்த காலத்தை விட்டுவிட்டு இச் சம்பவத்துக்கு முழு பொறுப்பேற்று இனியும் இது போன்ற சம்பவங்கள் நடக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும்" என தெரிவித்தார்.