இந்தியா

வீட்டுக் காவலிலுள்ள ஜம்மு-காஷ்மீர் தலைவர்கள் விரைவில் விடுதலை? 

வீட்டுக் காவலிலுள்ள ஜம்மு-காஷ்மீர் தலைவர்கள் விரைவில் விடுதலை? 

webteam

ஜம்மு-காஷ்மீரின் முன்னாள் முதலமைச்சர்களை வீட்டுக் காவலிலிருந்து விடுவிப்பது குறித்து இன்னும் சில நாட்களில் முடிவு எடுக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. 

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கு அளித்து வந்த சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு கடந்த ஆகஸ்ட் மாதம் 5ஆம் தேதி ரத்து செய்தது. அத்துடன் ஜம்மு-காஷ்மீர் மறுசீரமைப்பு மசோதாவையும் நிறைவேற்றியது. இதன்மூலம் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தை இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரித்தது. இதற்கு முன்பாக ஆகஸ்ட் 5ஆம் தேதி முதல் ஜம்மு-காஷ்மீரின் முக்கிய அரசியல் தலைவர்களை வீட்டுக் காவலில் வைத்தது. 

அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட 800 பேரை மத்திய அரசு காவலில் பிடித்து வைத்திருந்தது. அவர்களில் சில தலைவர்களை இந்த வாரம் மத்திய அரசு விடுவித்தது. அவர்களிடம்  இருந்து காஷ்மீரில் அமைதியை சீர்குலைக்க மாட்டோம் என்ற உறுதியை பெற்று தான் அவர்களை விடுவித்தது. எனினும் ஜம்மு-காஷ்மீரின் முன்னாள் முதல்வர்களான ஃபரூக் அப்துல்லா, ஒமர் அப்துல்லா, மெகபூபா முஃப்தி ஆகியோர் இன்னும் வீட்டுக் காவலில் தான் வைக்கப்பட்டுள்ளனர். 

இந்நிலையில் ஜம்மு-காஷ்மீரின் முன்னாள் முதலமைச்சர்களை விடுவிப்பது தொடர்பான முடிவு ஒரு சில நாட்களில் எடுக்கப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி ஜம்மு-காஷ்மீரில் இன்னும் காவலில் உள்ள அரசியல் தலைவர்கள் மற்றும் சிலரை விடுவிப்பது தொடர்பான முடிவு சில நாட்களில் எடுக்கப்படும் என்ற தகவல் தெரியவந்ததுள்ளது.